தர்பூசணி வாங்குவதுபோல நடித்து அ.தி.மு.க. பிரமுகரை கத்தியால் வெட்டி நகை பறித்த கும்பல்


தர்பூசணி வாங்குவதுபோல நடித்து அ.தி.மு.க. பிரமுகரை கத்தியால் வெட்டி நகை பறித்த கும்பல்
x
தினத்தந்தி 15 March 2019 3:45 AM IST (Updated: 14 March 2019 10:41 PM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றம் அருகே தர்பூசணி வாங்குவதுபோல நடித்து அ.தி.மு.க. பிரமுகரை கத்தியால் வெட்டி நகையை பறித்த கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நாகரத்தினம் (வயது 42). அ.தி.மு.க. பிரமுகரான இவர் திருக்கழுக்குன்றம் அடுத்த மேட்டுகருமாரப்பாக்கம் கிராமத்தில் 15 ஏக்கர் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளார்.

அந்த நிலத்தில் தர்பூசணி பயிரிட்டுள்ளார். இந்த நிலையில் நாகரத்தினம் தனது மனைவி ரேவதியுடன் (37) அந்த நிலத்தில் தர்பூசணி பழங்களை பார்வையிட சென்றார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், தர்பூசணி பழத்தை விலைக்கு கேட்டனர். அந்த நேரத்தில் திடீரென நாகரத்தினமும், அவரது மனைவி ரேவதியும் அணிந்திருந்த நகைகளை பறிக்க அவர்கள் முயற்சி செய்தனர். அதிர்ச்சி அடைந்த இருவரும் அவர்களை தடுக்க முயன்றனர். இதில் ஆவேசம் அடைந்த கும்பல், நாகரத்தினத்தின் தலையில் கத்தியால் வெட்டினர்.

இதில் அவர் நிலைதடுமாறினார். உடனே அந்த கும்பல் இருவரிடம் இருந்தும் 10 பவுன் தங்கநகைகளை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டது. தலையில் காயத்துடன் கிடந்த நாகரத்தினத்தை அருகே இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக் காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்மகும்பலை தேடி வருகின்றனர்.

Next Story