பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் பாரிவேந்தர் பேட்டி


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் பாரிவேந்தர் பேட்டி
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 6:36 PM GMT)

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன் என்று இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் கூறினார்.

பெரம்பலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறவுள்ளது. அந்த தேர்தலில் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் தனித்தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தி.மு.க. கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அது எந்த தொகுதி என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பெரம்பலூர் தொகுதியில் அ.தி.மு.க.வே போட்டியிடுகிறது. ஆனால் வேட்பாளர் யார்? என இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிட உள்ளதாக கூறப்படும் இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இந்தநிலையில் பெரம்பலூரில் நேற்று பாரிவேந்தர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் நான் வேட்பாளராக போட்டியிட உள்ளேன். நான் தேர்தலில் வெற்றி பெற்றால், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்வதற்கு வசதியாக தொகுதியில் இலவச குளிர்சாதன வாகனம் இயக்கப்படும் அல்லது விவசாயிகளுக்கு கட்டுப்படியாகும் விலைக்கு அவர்களது இடத்துக்கே சென்று விளைபொருட்களை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்வேன்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய 300 மாணவர்களை ஆண்டுதோறும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இலவச கல்வியும், நலிவுற்ற வேலையில்லா இளைஞர்கள் 500 பேருக்கு ஆண்டுதோறும் வேலைவாய்ப்பும் அளிக்கப்படும். மேலும், பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரெயில் சேவை கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story