குடிநீர் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்


குடிநீர் வழங்கக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டம்
x
தினத்தந்தி 14 March 2019 10:30 PM GMT (Updated: 14 March 2019 7:00 PM GMT)

குடிநீர் வழங்கக்கோரி ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு குடிநீர் வழங்கக் கோரியும், 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் மோசடிகளை கண்டித்தும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் காலிக்குடங்களுடன் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சங்க மாவட்ட துணை செயலாளர் எத்திராஜ் தலைமை தாங்கினார். குப்புசாமி, சரவணன், கிருஷ்ணன், எஸ்.குப்புசாமி, மணிகண்டன், கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் முத்து, மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் செல்வராசு, பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் அண்ணாமலை ஆகியோர் பேசினர். இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உட்பட்ட இரண்டத்தான் பட்டி, வைத்தியர் கொட்டாய் ஆகிய பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனவே, இப்பகுதிகளில் குடிநீர் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர். இது குறித்து அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது லாரி மூலம் குடிநீர் வழங்குவதாக உறுதியளித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story