மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 21,935 பேர் எழுதினர்


மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 21,935 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 15 March 2019 4:00 AM IST (Updated: 15 March 2019 1:04 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வை 21,935 பேர் எழுதினர்.

நாமக்கல்,

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு 309 பள்ளிகளை சேர்ந்த 11,574 மாணவர்களும், 10,353 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 927 மாணவ, மாணவிகள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுத விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 90 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

தேர்வு எழுத விண்ணப்பம் செய்த மாணவ, மாணவிகளில் 21 ஆயிரத்து 485 பேர் மட்டுமே தமிழ் முதல்தாள் தேர்வை எழுதினர். 435 பேர் தேர்வு எழுத வரவில்லை. விண்ணப்பம் செய்து இருந்த நபர்களில் மாற்றுத்திறனாளிகள் 7 பேருக்கு தமிழ் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இதேபோல் தனித்தேர்வர்கள் 483 பேர் தேர்வு எழுத விண்ணப்பம் செய்து இருந்தனர். இவர்களில் 33 பேர் தேர்வுக்கு வரவில்லை. 450 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். மொத்தமாக நாமக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல்தாள் தேர்வை 21 ஆயிரத்து 935 பேர் எழுதினர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை முதன்மை கல்வி அதிகாரி உஷா மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் இந்த தேர்வை கண்காணிக்க மாவட்டத்தில் 90 முதன்மை கண்காணிப்பாளர்களும், 90 துறை அலுவலர்களும், 252 நிரந்தர பறக்கும் படையினரும், 1,260 அறை கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டு இருந்ததாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு முதல் முறையாக பிற்பகலில் தேர்வு நடத்தப்பட்டது. இதையொட்டி நாமக்கல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கண்காணிப்பாளர் சந்திராமணி மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதேபோல் அனைத்து பள்ளிகளிலும் தேர்வு தொடங்கும் முன்பு முதன்மை கண்காணிப்பாளர்கள் மாணவ, மாணவிகளுக்கு ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்கினர்.

Next Story