மாவட்டத்தில் 159 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினர் கலெக்டர் ஆய்வு


மாவட்டத்தில் 159 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினர் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 15 March 2019 4:15 AM IST (Updated: 15 March 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் 159 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாணவ-மாணவிகள் நேற்று எழுதினர். தேர்வு மையத்தை கலெக்டர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார்.

திருச்சி,

தமிழகத்தில் 2018-19-ம் கல்வியாண்டுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 441 பள்ளிகளை சேர்ந்த 18 ஆயிரத்து 884 மாணவர்கள், 18,365 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 249 பேர் 159 மையங்களில் எழுதுகிறார்கள்.

கல்வி மாவட்ட அளவில் லால்குடி கல்வி மாவட்டத்தில் 8 ஆயிரத்து 68 பேரும், திருச்சி கல்வி மாவட்டத்தில் 15 ஆயிரத்து 332 பேரும், மணப்பாறை கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 965 பேரும், முசிறி கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 884 பேரும் தேர்வு எழுகிறார்கள். இது தவிர தனித்தேர்வர்கள் 1,234 பேரும் 10 மையங்களில் தேர்வு எழுதுகிறார்கள். அவர்களில் திருச்சி மத்திய சிறைச்சாலையில் 37 கைதிகளும் அடங்குவர்.

முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 4.45 மணிவரை நடந்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாணவ-மாணவிகள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில் 275 நிலையான மற்றும் பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. தேர்வு மையங்களில் குடிநீர், மின்சாரம், காற்றோட்டம் மற்றும் கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக தேர்வு மையத்திற்கு மாணவ-மாணவிகள் செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் கருவிகள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுத செல்லும் முன்பு மாணவ-மாணவிகள் சிலர் தேர்வு எளிதாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். சில மாணவிகள் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு தேர்வு மையத்திற்கு சென்றனர்.

திருச்சியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்த சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் சிவராசு நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருட்டினன் உடன் இருந்தார்.

மாலையில் தேர்வு முடிந்து, மையத்தை விட்டு வெளியே வந்த மாணவ-மாணவிகள், தமிழ் தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர்.

நேற்று நடந்த தமிழ் தேர்வுபோல, ஆங்கில பாடத்திற்கான தேர்வும் பிற்பகல் நடக்கும். இதர தேர்வுகள் அனைத்தும் காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12.45 மணிவரை நடக்கிறது. தேர்வு வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது.

Next Story