பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிக்க குறைந்தபட்ச வருமான திட்டம் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. பேட்டி


பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிக்க குறைந்தபட்ச வருமான திட்டம் ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 15 March 2019 3:00 AM IST (Updated: 15 March 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் வறுமையை ஒழிக்க குறைந்தபட்ச வருமான திட்டத்தை அமல்படுத்த பொதுமக்கள் ஆலோசனை கூறி இருப்பதாக ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. கூறினார்.

பெங்களூரு,

பா.ஜனதாவை சேர்ந்த ராஜீவ் சந்திரசேகர் எம்.பி. பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலுக்காக தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் கருத்துகளை கேட்டு அறிந்தோம். அதில் வறுமையை ஒழிக்க குறைந்தபட்ச அடிப்படை வருமான திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற ஆலோசனை வந்துள்ளது.

இந்த திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சேர்ப்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். அடுத்தகட்ட சீர்திருத்த திட்டங்களை சேர்ப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். பொதுமக்கள் கூறிய பல்வேறு ஆலோசனைகள் என்னை வெகுவாக ஈர்த்துள்ளன.

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தலைவரான ராஜ்நாத்சிங் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் கூறிய ஆலோசனைகள் அனைத்தும் விவாதிக்கப்படும். சில ஆலோசனைகள் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும்.

பிரியங்கா காந்தி வருகையால் உத்தரபிரதேசத்தில் பா.ஜனதாவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. குடும்ப அரசியல் மூலம் வருபவர்களை இளைஞர்கள் ஆதரிக்க மாட்டார்கள். கடுமையான உழைப்பின் மூலம் பதவிக்கு வர வேண்டும் என்று இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் சாதனைகள் என்ன?. ஆனால் அவர்கள் கட்சி பதவியை அனுபவிக்கிறார்கள். வெற்றி என்ற சாதனையை படைத்த பிரதமர் மோடி போன்ற தலைவர்களை மக்கள் விரும்புகிறார்கள். இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் கூறினார்.

Next Story