பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மடாதிபதி மாதே மகாதேவி மரணம் முதல்-மந்திரி குமாரசாமி இரங்கல்


பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மடாதிபதி மாதே மகாதேவி மரணம் முதல்-மந்திரி குமாரசாமி இரங்கல்
x
தினத்தந்தி 14 March 2019 10:00 PM GMT (Updated: 14 March 2019 8:15 PM GMT)

பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மடாதிபதி மாதே மகாதேவி நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் கூடலசங்கமத்தில் உள்ள பசவதர்ம பீடத்தின் பெண் மடாதிபதியாக இருந்தவர் மாதே மகாதேவி (வயது 73). லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அவர், தனது மடம் மூலம் பல்வேறு சமூக பணிகளை ஆற்றி வந்தார்.

அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து கடந்த 8-ந் தேதி பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று மரணம் அடைந்தார்.

இதுகுறித்து அந்த தனியார் மருத்துவமனை தலைவர் டாக்டர் சுதர்சன் பல்லால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பெண் மடாதிபதி மாதே மகாதேவி உடல்நிலை மோசமான நிலையில் கடந்த 8-ந் தேதி எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக கோளாறு உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்தன.

நாங்கள் தீவிர சிகிச்சை அளித்தோம். ஆனால் அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக தோல்வி அடைந்து வந்தன. இந்த நிலையில் நேற்று மாலை 4.45 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது குடும்பத்தினருக்கும், பக்தர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ேமலும் மாதே மகாதேவி மறைவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி உள்பட தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீஸ் மந்திரி எம்.பி.பட்டீல் மருத்துவமனைக்கு நேரில் சென்று மாதே மகாதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று மாதே மகாதேவி போராட்டம் நடத்தினார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநில அரசிடம் மனு கொடுத்தார். இந்த பிரச்சினையை அவர் தீவிரமாக கையில் எடுத்து போராடினார்.

லிங்காயத் மற்றும் வீரசைவம் ஆகியவை இரண்டும் வெவ்வேறு சமூகங்கள் என்ற வாதத்தை உறுதியாக எடுத்து வைத்து பேசி வந்தார். லிங்காயத் சமூக மடங்களில் இவரே முதல் பெண் மடாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

சித்ரதுர்கா மாவட்டம் சாலஹட்டி என்ற கிராமத்தில் 1946-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ந் தேதி மாதே மகாதேவி பிறந்தார். அவர் 1996-ம் ஆண்டு தீட்சை பெற்று மடாதிபதியாக பதவி ஏற்றார். அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல்வேறு நாடுகளுக்கு சென்று பசவண்ணரின் தத்துவங்களை பரப்பினார்.

Next Story