கருங்கலில் தொழிலாளியை கொலை செய்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு


கருங்கலில் தொழிலாளியை கொலை செய்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 14 March 2019 10:45 PM GMT (Updated: 14 March 2019 8:21 PM GMT)

கருங்கலில் தொழிலாளியை கொலை செய்தவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

நாகர்கோவில்,

கருங்கல் பரப்புவிளை பகுதியை சேர்ந்தவர் பிலிப் (வயது 72), தொழிலாளி. இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் மணி. இவருக்கும், பிலிப்புக்கும் இடையே பாதை அமைப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்தது. கடந்த 28-2-1988 அன்று பிலிப்பும், இவரது சகோதரர் மோகன்தாசும் பரப்புவிளை பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மணி மற்றும் இவரது நண்பர் தேவதாஸ் ஆகியோர் சேர்ந்து பிலிப்பை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தடுக்க வந்த மோகன் தாசையும் தாக்கினர். இதுதொடர்பாக கருங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் காளியன்ரத்தினம், மணி மற்றும் தேவதாஸ் மீது வழக்கு பதிவு செய்து மணியை கைது செய்தார். உடனே தேவதாஸ் போலீசில் சிக்காமல் தலைமறைவாகி விட்டார்.

இதற்கிடையே நாகர்கோவில் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் மணி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் அரசு தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் 15-4-1994-ல் மேல்முறையீடு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதில் மணி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த நிலையில் மணி டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். விசாரணை முடியும் முன்பே மணி இறந்து விட்டார்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தேவதாசை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இவர் கேரள மாநிலம் பத்தனம்திட்டையில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 17-5-2009-ல் தனிப்படை போலீசார் தேவதாசை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே தேவதாஸ் கடந்த 8 மாதத்திற்கு முன்பு நாகர்கோவில் கோர்ட்டில் ஒரு மனு அளித்தார். அதில், “நான் தேவதாஸ் இல்லை. எனது பெயர் தாசப்பன், சொந்த ஊர் பத்தனம்திட்டை. என்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்“ என்று கூறியிருந்தார். இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பிலிப் கொலை வழக்கில் தலைமறைவான தேவதாஸ் தான் இவர் என்பது தெரியவந்தது. உடனே கோர்ட்டு அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

அதன் பின்னர் இந்த வழக்கில் இறுதி விசாரணை நாகர்கோவில் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி கருப்பையா கடந்த மாதம் 26-ந் தேதி தேவதாஸ் குற்றவாளி என்றும், தண்டனை விவரம் மார்ச் 14-ந் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது. தேவதாசுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

31 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

Next Story