பிரதமர் மோடியின் சாதனை, பூஜ்ஜியம் தினேஷ் குண்டுராவ் பேட்டி


பிரதமர் மோடியின் சாதனை, பூஜ்ஜியம் தினேஷ் குண்டுராவ் பேட்டி
x
தினத்தந்தி 15 March 2019 4:45 AM IST (Updated: 15 March 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடியின் சாதனை பூஜ்ஜியம் என்று தினேஷ் குண்டுராவ் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், நேற்று மத்திய பா.ஜனதா அரசின் பொய்கள் என்ற பெயரில் கையேட்டை வெளியிட்டு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதா தலைவர்கள் பொய் சொல்வதிலேயே காலத்தை கழிக்கிறார்கள். பிரதமர் மோடியின் சாதனை, பூஜ்ஜியம். தனது சாதனைகளை சொல்லி அவர் ஓட்டு கேட்பது இல்லை.

மக்களின் உணர்வுப்பூர்வமான விஷயங்களை சொல்லி வாக்கு சேகரிக்கிறார். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திருத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது. சாமானிய மக்களின் நலனில் மோடிக்கு அக்கறை இல்லை. முன்பு கோவில் பெயரை சொல்லி அரசியல் செய்தனர். இப்போது தேசபக்தியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவ்வாறு தினேஷ் குண்டுராவ் கூறினார்.

இதைதொடர்ந்து முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கூறியதாவது:-
பெலகாவி தொகுதி வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடத்தினோம். அதை பகிரங்கப்படுத்த மாட்டோம். மல்லிகார்ஜுன கார்கே முதல்-மந்திரியாகி இருக்க வேண்டும் என்று தேவேகவுடா கூறி இருப்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

எனக்கு தெரியாத விஷயங்கள் பற்றி நான் பதில் சொல்ல மாட்டேன். இன்று (அதாவது நேற்று) மைசூருவுக்கு செல்கிறேன். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி வேட்பாளரை இறுதி செய்வேன். கர்நாடக அரசியலே எனக்கு போதும் என்றாகிவிட்டது. இன்னும் தேசிய அரசியலுக்கு எப்படி போவது?.

நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது இல்லை. இதை மிக தெளிவாக சொல்கிறேன். முன்னாள் மந்திரி ஏ.மஞ்சு, எடியூரப்பாவை சந்தித்து பேசியுள்ளார். நான் கூட விமான நிலையத்தில் எடியூரப்பாவை சந்தித்து பேசினேன். மாற்று கட்சி தலைவர்களை சந்தித்து பேசுவதில் தவறு ஒன்றும் இல்லை.

பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டேன் என்று ஏ.மஞ்சு என்னிடம் கூறியுள்ளார். உமேஷ்ஜாதவ் எம்.எல்.ஏ. ராஜினாமாவை ஏற்பது குறித்து சபாநாயகர் முடிவு செய்வார். இந்த விஷயத்தில் நாங்கள் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளோம். இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Next Story