திருச்சிற்றம்பலம் அருகே அரசு பஸ் மோதி ஐ.டி.ஐ. மாணவர் பலி மற்றொருவர் படுகாயம்


திருச்சிற்றம்பலம் அருகே அரசு பஸ் மோதி ஐ.டி.ஐ. மாணவர் பலி மற்றொருவர் படுகாயம்
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 8:55 PM GMT)

திருச்சிற்றம்பலம் அருகே அரசு பஸ் மோதி ஐ.டி.ஐ. மாணவர் பரிதாபமாக இறந்தார். மேலும் மற்றொரு மாணவர் படுகாயமடைந்தார்.

திருச்சிற்றம்பலம்,

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள ஆதனூர் கருப்பமனையை சேர்ந்தவர் இளஞ்சேகரன். இவரது மகன் இளந்தமிழன் (வயது16). அதே பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை மகன் பாலமுருகன் (18). இவர்கள் 2 பேரும் ஐ.டி.ஐ. மாணவர்கள் ஆவர். நேற்று காலை இருவரும் திருச்சிற்றம்பலத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். பின்னர் ஆவணம் கைகாட்டி வழியாக ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆவணம் கைகாட்டி வாகன சோதனை அருகே வந்த போது, காரைக்குடியில் இருந்து திருவாரூருக்கு சென்ற அரசு பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த இளந்தமிழன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

மேலும் மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்ற பாலமுருகன் படுகாயமடைந்தார். அவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து இளந்தமிழனின் தந்தை இளஞ்சேரன் கொடுத்த புகாரின் பேரில் திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அரசு பஸ் டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள். மேலும் இளந்தமிழனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Next Story