கொடைக்கானல் அருகே, காட்டெருமை முட்டி தொழிலதிபர் பலி
கொடைக்கானல் அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டெருமை முட்டியதில் தொழிலதிபர் பலியானார்.
கொடைக்கானல்,
கொடைக்கானல் நாயுடுபுரத்தை சேர்ந்தவர் ஜெபராஜ் (வயது 55). தொழிலதிபர். இவர் கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் உள்ள படகு குழாமின் உறுப்பினராகவும், ஸ்கல் படகு பயிற்சியாளராகவும் பணிபுரிந்து வந்தார். படகு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான கோப்பைகளையும் வென்றுள்ளார்.
இவருடைய மனைவி சந்திரமணி. இவர் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரியின் முதல்வராக உள்ளார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவர்களுக்கு கொடைக்கானலில் இருந்து வில்பட்டி செல்லும் சாலையில் சொந்தமாக தோட்டம் மற்றும் வீடு உள்ளது.
இந்த நிலையில் நேற்று பகலில் வில்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு ஜெபராஜ் சென்று இருந்தார். அப்போது காட்டெருமை ஒன்று அந்த தோட்டத்துக்குள் அத்துமீறி புகுந்தது. அந்த காட்டெருமை ஜெபராஜை கண்டதும் விரட்டியது. உடனே அவர் அங்கு இருந்து தப்பியோடினார்.
ஆனால் அவரை விடாமல் துரத்தி சென்று காட்டெருமை முட்டி தள்ளியது. இதில் படுகாயமடைந்த ஜெபராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கொடைக்கானல் வனச்சரக அலுவலகத்துக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வனச்சரகர் ஆனந்தகுமார், வனவர் ஜாபர் மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய உடலை மீட்டனர். மேலும் அப்பகுதியில் இருப்பவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டெருமைகள் உலா வருகின்றன. இந்த காட்டெருமைகள் முட்டி பலர் காயம் அடைந்து உள்ளனர். சிலர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். எனவே மனிதர்களின் உயிருக்கு உலை வைக்கும் காட்டெருமைகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்டுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story