தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ரூ.1 லட்சத்துக்கு மேல் எடுப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் - வங்கியாளர்களுக்கு, கலெக்டர் அறிவுரை


தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ரூ.1 லட்சத்துக்கு மேல் எடுப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் - வங்கியாளர்களுக்கு, கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 15 March 2019 3:45 AM IST (Updated: 15 March 2019 3:08 AM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் வங்கிகளில் ரூ.1 லட்சத்துக்கு மேல் எடுப்பவர்கள் குறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று வங்கியாளர்கள் கூட்டத்தில் கலெக்டர் டி.ஜி.வினய் அறிவுறுத்தினார்.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்ட வங்கியாளர்கள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கினார். முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன் உள்பட அனைத்து வங்கிகளின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. எனவே, தனிநபர் வங்கி கணக்கில் இருந்து சந்தேகப்படும் பண பரிவர்த்தனை இருந்தால், வங்கியாளர்கள் தினமும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல் சந்தேகத்துக்கு இடமான பண வரவு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் வங்கியில் ரூ.1 லட்சத்துக்கு மேல் பணம் எடுப்பவர்களின் தகவல்களை வங்கியாளர்கள் வழங்க வேண்டும். ஏ.டி.எம்.மையங்களுக்கு கொண்டு செல்லப்படும் தொகை தொடர்பான விவரங்களை வங்கிகள் வழங்க வேண்டும்.

ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் கொண்டு செல்லும் முகவர்களின் முழு தகவல்கள், வாகனங்களின் எண் தொடர்பான விவரங்களை மாவட்ட தேர்தல் அலுவலரிடம், வங்கியாளர்கள் தெரிவிக்க வேண்டும். இதுதவிர ரூ.10 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனை, வருமான வரித்துறை மூலம் ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

ஒரே வங்கி கணக்கில் இருந்து வழக்கத்துக்கு மாறாக பல நபர்களின் வங்கி கணக்குக்கு பண பரிமாற்றம், சந்தேகப்படும் வகையில் பண பரிமாற்றம் குறித்து தினமும் அனைத்து வங்கி கிளைகளில் இருந்தும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கையை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்கு) சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story