பொங்கலூர் அருகே, குடிசை தீப்பிடித்து எரிந்ததில் தந்தை-மகள் படுகாயம்


பொங்கலூர் அருகே, குடிசை தீப்பிடித்து எரிந்ததில் தந்தை-மகள் படுகாயம்
x

பொங்கலூர் அருகே குடிசை தீப்பிடித்து எரிந்ததில் தந்தை-மகள் படுகாயம் அடைந்தனர்.

பொங்கலூர்,

பொங்கலூர் அருகே கொடுவாய், கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் சுப்பன்(வயது 68). இவரது மனைவி லட்சுமி(65). இவர்களது மகள் பழனாள்(45). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனவே தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர்கள் அனைவரும் அதே பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் தங்கி விவசாயம் செய்து வந்தனர்.

அந்த தோட்டத்திலேயே குடிசை அமைத்து தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் இவர்களது வீட்டின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் வீட்டினுள் இருந்து வெளியே வருவதற்குள் சுப்பன் மற்றும் பழனாள் ஆகியோர் மீது தீப்பிடித்தது.

இந்த தீ விபத்தில் சுப்பனுக்கு வலது கையில் தீக்காயமும், அவரது மகள் பழனாளுக்கு பலத்த தீக்காயமும் ஏற்பட்டது. அப்போது அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வீட்டை வெளியே ஓடி வந்து சத்தம்போட்டனர். அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் குடிசை வீடு என்பதால் தீ மள மளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் பல்லடம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் கருகி சேதமானது. இதில் துணிகள், கட்டில், பீரோ, சைக்கிள், சிலிண்டர், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்பட அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது.

இந்த தீவிபத்தில் 10 நாட்டு கோழிகள், சோளத்தட்டு தீவனம் ஆகியவையும் எரிந்து போனது. இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்த பழனாள் காங்கேயத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். படுகாயம் அடைந்த சுப்பனும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story