பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தை கண்டித்து ம.தி.மு.க- மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து புதுவையில் ஆர்ப்பாட்டம் நடத்திய ம.தி.மு.க.வினர் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஒரு கும்பல் சமூக வலைதளங்கள் மூலமாக கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை காதல் வலையில் வீழ்த்தினர். பின்னர் அவர்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் புதுவை மாநில ம.தி.மு.க. சார்பில் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி ராஜா தியேட்டர் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொறுப்புக்குழு தலைவர் கபிரியேல் தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர் கவுரி, இளைஞர் அணி செயலாளர் இளங்கோ மற்றும் பாத்திமா, மரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்த பெரியகடை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 19 பெண்கள் உள்பட 25 பேரை கைது செய்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலை சுதேசி மில் அருகே அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாதர் சங்கம் புதுச்சேரி தலைவர் சந்திரா ஆர்ப்பாட்டத்துக்க தலைமை தாங்கினார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் சுதா சுந்தரராமன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
செயலாளர் சத்தியா, முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் உமா, சமம் சுய உதவிக்குழு சிவகாமி உள்பட பல்வேறு சமூக அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story