மதுரையில் வாக்குப்பதிவு தேதியை மாற்றக்கோரிய வழக்கு: தேர்தல் ஆணைய வக்கீலிடம் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்
மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தேதியை மாற்றக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய வக்கீலிடம், மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். உரிய பதில் தராவிட்டால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக நேரிடும் எனவும் எச்சரித்தனர்.
மதுரை,
மதுரை டி.வி.எஸ். நகரை சேர்ந்த பார்த்தசாரதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால் அன்றைய தினம் மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள். ஏப்ரல் 8-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா தொடங்க உள்ளது.
18-ந்தேதி தேரோட்டம் மற்றும் கள்ளழகர் எதிர்சேவை, 19-ந்தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி தொடர்ச்சியாக நடக்கின்றன. திருவிழாவில் பங்கேற்பவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வதிலும் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். திருவிழாவின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்களில் உள்ளூர் விடுமுறை விடப்படும். மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பெரும்பாலானவர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்பார்கள். இதனால் வாக்குப்பதிவு பெருமளவு குறையும். எனவே மதுரையில் ஏப்ரல் 18-ந்தேதி நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், “ஏப்ரல் 19-ந்தேதி புனித வெள்ளியையொட்டி பொது விடுமுறை நாள். அதை கருத்தில் கொண்டு தான் 18-ந்தேதி தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. எனவே மதுரையில் நாடாளுமன்ற தேர்தல் தேதியை மாற்ற முடியாது. தேவைப்பட்டால் வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் நீட்டிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. துணை ராணுவத்தின் உதவியை பெற்று தேர்தலை அமைதியாக நடத்த முடியும் என்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் தரப்பில் உறுதி அளித்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஒரே தேதியில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. மதுரையில் மட்டும் தேர்தல் தேதியை மாற்ற இயலாது“ என வாதாடினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “அப்படியென்றால் தமிழகம் முழுவதும் தேர்தலை ஒத்தி வைக்கலாமே?” என கேள்வி எழுப்பினர். அதற்கு தேர்தல் ஆணைய வக்கீல், “தேர்தல் திட்டமிடப்பட்ட ஒன்று. இங்கு தேர்தல் தேதியை மாற்றினால், அது பிற மாநிலங்களில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எனவே திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும்“ என தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், “திட்டமிட்டபடி தேர்தலை நடத்துங்கள். ஆனால் அனைத்து வாக்காளர்களும் ஓட்டு போட முடியுமா? என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். கடமைக்காக நடத்தினால் தேர்தலை நடத்துங்கள்“ என்றனர்.
தேர்தல் ஆணைய வக்கீல், “மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் 59 வாக்குச்சாவடிகள் உள்ளன. அவற்றில் 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு கூடுதல் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டர் தூரத்துக்குள் வாக்காளர்களை தவிர, மற்றவர்கள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள். இதுபோல பாதுகாப்புடன் அமைதியாக தேர்தல் நடத்தப்படும்“ என தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் பதிலுக்கு நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் அவர்கள், “பல லட்சம் பேர் கலந்து கொள்ளும் சித்திரை திருவிழாவையும், தேர்தலையும் ஒரே சமயத்தில் சுமுகமாக, அமைதியாக நடத்துவது என்பது சாத்தியமற்றது. ஏப்ரல் 18-ந்தேதி தேரோட்டம் கொண்டாடப்படும்போது, தேர்கள் செல்லும் பாதையை கருத்தில் கொள்ளாமல், காலை 6 மணி முதல் (காலையில் ஒரு மணி நேரமும், மாலையில் ஒரு மணி நேரமும் கூடுதலாக நேரம் ஒதுக்கி) தேர்தலை நடத்த திட்டமிட்டது எவ்வாறு?” என கேள்வி எழுப்பினர்.
“இந்த விஷயத்தில் கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. எனவே இந்த வழக்கில் தேர்தல் ஆணையம் உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராக நேரிடும்“ என்று எச்சரித்த நீதிபதிகள், விசாரணையை நாளை (அதாவது இன்று) ஒத்திவைத்தனர்.
Related Tags :
Next Story