ரூ.1 லட்சத்துக்கு மேல் நடைபெறும் பணம் பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும் வங்கி அதிகாரிகளுக்கு தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்
வங்கிகள் மூலம் ரூ.1 லட்சத்துக்கும் மேல் நடைபெறும் பணம் பரிவர்த்தனைகளை கண்காணிக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகளுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவராவ் அறிவுறுத்தி உள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூட்ட அரங்கில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக வங்கிகள் மூலம் மேற்கொள்ளப்படும் பணம் பரிவர்த்தனைகள் குறித்து முறையே கண்காணிப்பதற்காக அனைத்து வங்கியாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் வீரராகவ ராவ் தலைமை தாங்கி பேசியதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலை அறிவித்துள்ளதை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் தேர்தல் மாதிரி நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுஉள்ளன. இந்த தேர்தல் நன்னடத்தை விதிமீறல்களை கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக சட்டமன்ற தொகுதிக்கு தலா 3 குழுக்கள் வீதம் 12 பறக்கும்படை குழுக்கள், 12 நிலைத்த கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டு 8 மணி நேர சுழற்சி முறையில் தொடர்ந்து 24 மணி நேரமும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வங்கிகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளை கண்காணிப்பது அவசியமாகும். குறிப்பாக ரூ.1 லட்சத்துக்கு மேலாக குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டாலோ, பணம் செலுத்தப்பட்டாலோ மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அதேபோல குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்து சீரான முறையில் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் செலுத்தப்படுவது குறித்தும் கண்காணிக்க வேண்டும். மேலும் அரசியல் கட்சி வேட்பாளர்கள், வேட்பாளர்களை சார்ந்தோர் ஆகியோரது வங்கி கணக்குகளையும் முறையே கண்காணித்து பண பரிவர்த்தனைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகளை தினந்தோறும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அறிக்கையாகவும் சமர்ப்பிக்க வேண்டும்.
முறைகேடான பண பரிவர்த்தனைகளை 100 சதவீதம் தவிர்த்திடும் விதமாக அனைத்து வங்கியாளர்களும் விழிப்புடன் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அனைத்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story