பெண்ணை தாக்கி பலாத்காரம்: போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு


பெண்ணை தாக்கி பலாத்காரம்: போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 15 March 2019 3:45 AM IST (Updated: 15 March 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை தாக்கி பலாத்காரம் செய்த போலீஸ்காரர் உள்பட 2 பேருக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள வீரநாயக்கன்தட்டை சேர்ந்தவர் காமராஜ். இவருடைய மகன் சிவக்குமார் (வயது 22). இவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு போலீஸ் பட்டாலியனில் பணியாற்றி வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு விடுமுறையில் அவர் ஊருக்கு வந்தார். கடந்த 14-8-2014 அன்று ஊருக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் சிவக்குமார், தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் சக்திவேலுவுடன் (25) சுற்றிக் கொண்டு இருந்தார்.

அப்போது 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் அங்கு மாடு மேய்த்துக் கொண்டு இருந்தார். உடனே சிவக்குமார், சக்திவேல் ஆகிய 2 பேரும் அந்த பெண்ணை தாக்கி பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் மயங்கிய நிலையில் கிடந்த பெண்ணை போலீசார் மீட்டனர்.

இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ் விசுவநாதன் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் சிவக்குமார், சக்திவேல் ஆகிய 2 பேருக்கும் தலா 7 ஆண்டு ஜெயில் தண்டனையும், சிவக்குமாருக்கு ரூ.4 ஆயிரத்து 500-ம், சக்திவேலுக்கு ரூ.5 ஆயிரமும் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சுபாஷினி ஆஜர் ஆனார். 

Next Story