வாகன சோதனையில் ஈடுபடும் பறக்கும் படை-நிலை கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு பயிற்சி
வாகன சோதனையில் ஈடுபடுகிற பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு தேனியில் நடந்தது.
தேனி,
தேனி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவில் உள்ள அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது:-
பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு அலுவலர்கள் உரிய காலத்திற்கான பணியினை திறம்பட செய்ய வேண்டும். தவிர்க்க முடியாத சூழ்நிலை வரும் போது, தனக்கு பதிலாக பிற அலுவலரை நியமிக்க வேண்டும்.
பறக்கும் படை குழுவினர்கள், தங்களுக்கு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து வரும் புகார்களுக்கு உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்த வேண்டும். ஏதேனும் பணமோ, பொருளோ பறிமுதல் செய்யும் பட்சத்தில் உடனடியாக புகார்களை பதிவு செய்து பறிமுதல் செய்யப்பட்ட பொருள் அல்லது பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்து அதற்கான ரசீது பெற்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
நிலை கண்காணிப்பு குழுவினர்கள் மாவட்டத்திற்குள் வரும் வாகனங்களை ஒளிப்பதிவுடன் சோதனை செய்ய வேண்டும். சோதனையின்போது வாகனங்களில் ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாகவோ அல்லது ரூ.10 ஆயிரத்துக்கு மேல் பொருட்களாகவோ கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மாவட்ட கருவூலத்தில் அவற்றை ஒப்படைக்க வேண்டும்.
வீடியோ கண்காணிப்பு குழுவினர்கள் அனுமதி பெற்று அரசியல் கட்சியினர் அல்லது வேட்பாளர்கள் நடத்தும் பிரசாரம், ஊர்வலம், பொதுக்கூட்டங்களை முறையாக ஒளிப்பதிவு செய்ய வேண்டும். இதன்மூலம் அனுமதி பெற்றதை விட பிரசாரத்தின் போது கூடுதலாக பயன்படுத்தும் வாகனங்கள், பொருட்கள் போன்றவற்றின் செலவை கணக்கிட முடியும். எனவே, தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள் மற்றும் போலீசார் தங்களின் பணியை சிறப்புடன் செய்ய வேண்டும்.
பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுவில் பணியாற்றும் ஒளிப்பதிவாளர்கள் வாகன தணிக்கையை முழுமையாக பதிவு செய்ய வேண்டும். வாகனங்களின் பதிவு எண், பறிமுதல் செய்யும் பொருட்கள் அல்லது பணத்தை கேமராவில் பதிவு செய்ய வேண்டும். வாகனங்களுக்குள் பெண்கள் இருந்தால் அவர்களிடம் ஒளிப்பதிவு செய்வது குறித்து தகவல் தெரிவித்து விட்டு சோதனையை பதிவு செய்ய வேண்டும். வாகனத்தில் கொடி கட்டப்பட்டு இருந்தால் அதையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பயிற்சி வகுப்பில் மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான கந்தசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட கருவூல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story