சீகூர் வனப்பகுதியில் காட்டுத்தீ வனத்துறையினர் போராடி அணைத்தனர்


சீகூர் வனப்பகுதியில் காட்டுத்தீ வனத்துறையினர் போராடி அணைத்தனர்
x
தினத்தந்தி 14 March 2019 11:00 PM GMT (Updated: 14 March 2019 11:05 PM GMT)

சீகூர் வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயை வனத்துறையினர் போராடி அணைத்தனர்.

மசினகுடி,

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வெளி மண்டல பகுதியாக சீகூர் வனப்பகுதி உள்ளது. இங்கு காட்டுயானை, புலி, சிறுத்தைப்புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனப்பகுதிக்குள் மனிதர்கள் நடமாட்டம் இருக்காது என்பதால் வனவிலங்குகள் எந்த தொந்தரவும் இன்றி சுற்றித்திரிகின்றன.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சீகூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட சிறியூர் மலைச்சரிவில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனச்சரகர் செல்வம், வனவர் சித்தராஜ் ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றனர். மலைச்சரிவில் கொழுந்துவிட்டு எரிந்த காட்டுத்தீ, சிறிது நேரத்தில் அருகிலுள்ள வனப்பகுதிக்கும் பரவியது. இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணியில் சீகூர் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை கட்டுப்படுத்த கடினமாக இருந்தது.

இதனால் முதுமலை புலிகள் காப்பக பிற பகுதிகளில் இருந்து கூடுதலாக வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் 200-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் போராடி தீயை முற்றிலுமாக அணைத்தனர். இந்த காட்டுத்தீயில் சிறியூர் மலைச்சரிவில் 200 ஏக்கர் பரப்பளவிலான புற்கள் மற்றும் லண்டானா எனப்படும் களைச்செடிகள் கருகி நாசமாகின.

இதற்கிடையில் காட்டுத்தீயை அணைக்க கோவை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து நேற்று காலை 6.15 மணியளவில் ஹெலிகாப்டர் வந்தது. காட்டுத்தீ ஏற்பட்ட மலைச்சரிவை வட்டமிட்ட அந்த ஹெலிகாப்டர், தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டு விட்டதால் திரும்பி சென்றது. காட்டுத்தீ ஏற்பட்ட பகுதியை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் கோசல் மற்றும் துணை கள இயக்குனர் புஷ்பாகரன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

Next Story