மாவட்ட செய்திகள்

முகாமுக்குள் புகுந்து காட்டு யானை தாக்கியதில் கும்கி சேரன் காயம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை + "||" + Wild elephant into the camp Kumki Cheran injured in attack - Intensive care doctors

முகாமுக்குள் புகுந்து காட்டு யானை தாக்கியதில் கும்கி சேரன் காயம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை

முகாமுக்குள் புகுந்து காட்டு யானை தாக்கியதில் கும்கி சேரன் காயம் - டாக்டர்கள் தீவிர சிகிச்சை
முகாமுக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் கும்கி யானை சேரன் காயம் அடைந்தது. அந்த யானைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
கோவை,

கோவை வனக்கோட்டத்தில் கோவை, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், போளுவாம்பட்டி, காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை ஆகிய 7 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானைகள் அதிகம் உள்ளதால், அவ்வப்போது மலையடிவார கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த காட்டு யானைகளை துரத்துவதற்காக கோவை அருகே உள்ள சாடிவயலில் கும்கிகள் முகாம் உள்ளது. இங்கு சேரன் (வயது 32), ஜான் (27) ஆகிய 2 கும்கி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கும்கிகள் முகாமுக்குள் காட்டு யானைகள் புகுந்து விடாமல் இருப்பதை தடுக்க முகாமை சுற்றிலும் அகழி வெட்டப்பட்டு உள்ளது. அதையும் மீறி காட்டு யானைகள் உள்ளே வந்தால் அவற்றை துரத்துவதற்காக வேட்டை தடுப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணிக்கு காட்டு யானை ஒன்று கும்கி முகாமுக்குள் புகுந்தது.

அதைபார்த்ததும் அங்கு இருந்த கும்கி யானை சேரன் பிளிறியது. உடனே அங்கிருந்த வேட்டை தடுப்பு காவலர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த காட்டு யானை தந்தத்தால் கும்கி யானையை தாக்கியது. இதில் அந்த யானையின் பின்பக்க இடதுகாலிலும், வால் அருகிலும் 2 இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனால் கும்கி யானை சேரன் வலிதாங்க முடியாமல் சத்தமாக பிளிறியது.

உடனே வேட்டை தடுப்பு காவலர்கள், வனத்துறையினர் காட்டு யானையை பட்டாசு வெடித்து அங்கிருந்து துரத்தினார்கள். அத்துடன் காயம் அடைந்த கும்கி யானை சேரனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் நேற்று காலையில் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் அந்த கும்கி யானைக்கு சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அந்த யானையின் உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகிறார்கள்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போது இனப்பெருக்க காலம் என்பதால் கும்கி யானை சேரன் மஸ்துவில் (வேட்கை) இருக்கிறது. அது போன்று முகாமுக்குள் புகுந்த காட்டு யானையும் மஸ்துவில் தான் இருந்தது. இதனால் அந்த யானை தாக்கியதில் சேரனுக்கு லேசான காயம் தான் ஏற்பட்டு உள்ளது. ஒரு வாரத்தில் இந்த காயம் சரியாகிவிடும்.

இந்த முகாமை சுற்றிலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு அகழி வெட்டப்பட்டது. தற்போது அது பல இடங்களில் மண் மூடி காணப்படுகிறது. இதனால்தான் காட்டு யானை எளிதில் கும்கி முகாமுக்குள் புகுந்து விட்டது. எனவே மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடப்பதை தடுக்க முகாமை சுற்றிலும் 2½ கி.மீ. தூரத்துக்கு அகழி வெட்டப்பட்டு வருகிறது.

வழக்கமாக அகழி வெட்டும்போது 2 மீட்டர் ஆழத்திலும், மேல்பகுதியில் 2½ மீட்டர் அகலத்திலும், கீழ்ப்பகுதியில் 1 மீட்டரும் இருக்கும். தற்போது இந்த முகாமை சுற்றிலும் வெட்டப்படும் அகழி 2½ மீட்டர் ஆழமும், அகலம் மேல்பகுதியில் 3 மீட்டரும், அடிப்பகுதியில் 1 மீட்டரும் உள்ளது. முகாமுக்கு செல்லும் பாதையில் கேட் போடப்பட உள்ளது. அதில் சூரிய சக்தி மின் கம்பிவேலியும் அமைக்கப்பட உள்ளது.

தற்போது அகழி வெட்டப்பட்டு வருவதால், காட்டு யானைகள் மீண்டும் முகாமுக்குள் புகுவதை தடுக்க வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர், யானை பாதுகாப்பு படையினர் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

தொடர்புடைய செய்திகள்

1. பொள்ளாச்சி அருகே தொடர்ந்து அட்டகாசம்: காட்டு யானை தாக்கி விவசாயி சாவு
பொள்ளாச்சி அருகே தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் காட்டு யானை தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை