18 வயது நிரம்பிய அனைவரும் ஓட்டு போட முன்வர வேண்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் ஷில்பா வலியுறுத்தல்
18 வயது நிரம்பிய அனைவரும் ஓட்டு போட முன்வர வேண்டும் என தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் ஷில்பா வலியுறுத்தினார்.
நெல்லை,
நெல்லை அருகே பொன்னாக்குடியில் உள்ள கல்லூரியில் ஓட்டு போடுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் வீடியோ வாகனம் மூலம் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு குறித்த குறும்பட ஒலி, ஒளிக்காட்சி தொடக்க நிகழ்ச்சியும் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை நெல்லை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஷில்பா தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் மாணவிகள் மத்தியில் கூறியதாவது:-
ஜனநாயக கடமையான தேர்தலில் ஓட்டுபோடுவது 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். நல்ல நிர்வாகத்தையும், நிர்வாகத்திடமிருந்து பொது சேவைகளை பெறவும், ஓட்டு போடுவது என்பது நமது ஒவ்வொருவரது உரிமையாகும். எனவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொரு மாணவிகளும் 18 வயது பூர்த்தியானவர்கள் ஓட்டு போடுவதோடு, பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஓட்டுபோடுவதன் அவசியம் கூறித்து எடுத்துக் கூறி, ஓட்டு போடச் செய்ய வேண்டும். பிற மாநிலங்களை விட கல்வியில் அதிக சதவீதம் உள்ள நாம் 100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தின் செயல்பாடு, யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரத்தின் செயல்பாடு ஆகியவை குறித்து மாணவிகளுக்கு நேரடி செயல்முறை விளக்கத்தை கலெக்டர் விளக்கி கூறினார்.
பின்னர், கலெக்டர் தலைமையில் நேர்மையாக ஓட்டுபோடும் வாக்காளர்களின் உறுதிமொழியை மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) சுகபுத்ரா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ராமசந்திரபிரபு, எம்.எஸ்.மகாகிருஷ்ணன், தாசில்தார்கள் கனகராஜ், ரகுமத்துல்லா, பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story