மாஞ்சோலை மரப்பால விவகாரம்: நெல்லையில் மனித உரிமை ஆணையம் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை
மாஞ்சோலை மரப்பால விவகாரம் தொடர்பாக நெல்லையில் மனித உரிமை ஆணையம் வனத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலையில் இருக்கும் மரப்பாலம் சேதம் அடைந்தது தொடர்பாகவும், அதனை புதுப்பித்து கட்டுவது தொடர்பாகவும் ஜான்சன் அப்பாத்துரை என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு வந்தார். அவர் மாஞ்சோலை மரப்பாலம் பிரச்சினை தொடர்பாக விசாரணை நடத்தினார். அப்போது களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பக அம்பை துணை இயக்குனர் கொம்மு ஓம்கார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆஜரானார்கள். அவர்களிடம் நீதிபதி ஜெயச்சந்திரன், மாஞ்சோலை ரோடு மற்றும் அங்கு காட்டாற்றின் குறுக்கே அமைந்திருந்த மரப்பாலம் அகற்றப்பட்டது தொடர்பாகவும், புதிய பாலம் கட்டும் பணி தொடர்பாகவும் பல்வேறு கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டார்.
அப்போது வனத்துறை அதிகாரிகள் வருகிற 31-ந்தேதிக்குள் புதிய பாலம் கட்டும் பணியை முடித்து விடுவோம் என்று உத்திரவாதம் அளித்தனர். பின்னர் இது தொடர்பான வழக்கை வருகிற ஜூலை மாதம் 12-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதேபோல் தூத்துக்குடி விமானத்தில் வந்தபோது தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக கோஷமிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவி தொடர்ந்த மனித உரிமை மீறல் வழக்கும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவியின் தந்தை சாமி ஆஜரானார். இந்த வழக்கில் ஏற்கனவே இன்ஸ்பெக்டர் திருமலை, சப்-இன்ஸ்பெக்டர் லதா ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு உள்பட மேலும் 5 அதிகாரிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
மொத்தம் 56 வழக்குகள் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. பின்னர் அனைத்து வழக்குகளும் ஜூலை மாதம் 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
Related Tags :
Next Story