கூடுவாஞ்சேரி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் தம்பதி தீக்குளித்து தற்கொலை


கூடுவாஞ்சேரி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் தம்பதி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 16 March 2019 4:45 AM IST (Updated: 16 March 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் காதல் தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர்.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர் டி.டி.சி. நகர், ஜவகர் அய்யா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஜன்னல் வழியாக கரும்புகை வெளியே வந்து கொண்டிருந்தது. மேலும் வீட்டில் இருந்து அலறல் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. வீட்டில் இருந்து கரும்புகை தொடர்ந்து வருவதை பார்த்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்தவர்கள் தங்களது வீட்டை பூட்டி விட்டு அலறி அடித்துக்கொண்டு மாடியில் இருந்து அனைவரும் கீழே இறங்கி ஓடி வந்துவிட்டனர்.

இதனையடுத்து மேல் வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டே இருப்பதால் உடனடியாக மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்திற்கும், கூடுவாஞ்சேரி போலீசாருக்கும் அக்கம்பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். வீட்டுக்குள் இருந்து தொடர்ந்து அலறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த வீட்டுக்கு சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொதுமக்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ஆண், பெண் இருவரும் தீயில் கருகி கொண்டிருந்தனர். வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து கொண்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் தங்களால் முடிந்த அளவு தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலை நகர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார் வீட்டில் ஏற்பட்ட தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து முழுமையாக அணைத்தனர்.

பின்னர் போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, ஆண் ஒருவர் உடல் முழுவதும் கருகிய நிலையில் பரிதாபமாக இறந்து கிடந்தார். பெண் ஒருவர் உடல் முழுவதும் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அந்த பெண்ணை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் நேற்று காலை பரிதாபமாக இறந்தார். ஏற்கனவே வீட்டில் இறந்துபோன ஆண் நபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டை நேரில் ஆய்வு செய்தனர்.

இது குறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் இறந்து போனவர்கள் எலெக்ட்ரீசியன் முகமது ஷாஜா ரியாஸ் (வயது 33) என்பதும், அவரது மனைவி தமிழ்ச்செல்வி (32) என்பதும் தெரியவந்தது. வெவ்வேறு மதத்தை சேர்ந்த இவர்கள் பெற்றோர் எதிர்ப்பை மீறி 2013-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வி தற்போது எம்.பி.ஏ. படித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதன் காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி சிறுசிறு பிரச்சினைகள் வந்துள்ளது. இதனால் மனமுடைந்த இருவரும் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று முடிவு செய்து நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு, உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர். வீட்டில் இருந்து மண்ணெண்ணெய் கேன் கைப்பற்றப்பட்டுள்ளது. கணவன், மனைவி இருவரும் தற்கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் கூறினார்.

குழந்தை இல்லாத காரணத்தால் காதல் தம்பதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆதனூர் டி.டி.சி.நகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story