தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வு, பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் பெற்றோர்களுக்கு உறுதிமொழி கடிதம் - கலெக்டர் வழங்கினார்
தேர்தலில் வாக்களிக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் பெற்றோர்களுக்கு உறுதிமொழி கடிதங்களை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்.
ஊட்டி,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ‘எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது’ என்பதை கருத்தில் கொண்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் மூலம் பெற்றோர்களிடம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி கடிதம் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
அப்போது தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான இன்னசென்ட் திவ்யா பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் பேசியதாவது:-
வீட்டில் அம்மா, அப்பா, சித்தப்பா, மாமா மற்றும் அருகில் வசிப்பவர்கள் 18 வயது நிரம்பி இருந்தால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க செய்ய வேண்டும். யாரும் ஓட்டு போடாமல் இருக்கக்கூடாது என்று வலியுறுத்த வேண்டும். உங்களிடம் வழங்கப்படும் உறுதிமொழி கடிதத்தில் தாய், தந்தை மற்றும் உறவினர்களிடம் கையெழுத்து பெற்று, வாக்காளர் அடையாள அட்டை எண், நாள் குறிப்பிட்டு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கடிதங்களை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அதனை தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பெற்றோரின் உறுதிமொழி கடிதங்கள் வழங்கப்பட்டது. அந்த கடிதத்தில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்தவொரு ஜாதி, மத, இன, வகுப்பு மற்றும் மொழி பாகுபாட்டிற்கும் ஆட்படாமல் தவறாமல் 18.4.2019 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறேன் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
முன்னதாக ஊட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு அலுவலகத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர்களில் ‘ஓட்டு போடுங்க’ என்ற விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடந்தது. வீடுகளில் சமையல் கியாஸ் சிலிண்டர்களை பயன்படுத்தும் குடும்பத்தலைவிகள் இடையே தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து ஊட்டி அருகே மசினகுடி, ஆனைக்கட்டி, சிறியூர், மாயார், மாவனல்லா ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். இதில் ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், தாசில்தார் மகேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story