ஸ்கூட்டர் மீது கிரேன் மோதி விபத்து தலை நசுங்கி பெண் பரிதாப சாவு - தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு


ஸ்கூட்டர் மீது கிரேன் மோதி விபத்து தலை நசுங்கி பெண் பரிதாப சாவு - தப்பி ஓடிய டிரைவருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 March 2019 4:30 AM IST (Updated: 16 March 2019 1:30 AM IST)
t-max-icont-min-icon

ஸ்கூட்டர் மீது கிரேன் மோதிய விபத்தில் தலை நசுங்கி பெண் பரிதாபமாக இறந்தார். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

சூலூர், 

கோவை உப்பிலிபாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 47), தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதிமணி (47). கணவன்-மனைவி 2 பேரும் திருச்சி சாலையில் ஸ்கூட்டரில் சூலூர் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். ஸ்கூட்டரை ஆறுமுகம் ஓட்டினார்.

இவர்களுக்கு பின்னால் வந்த கிரேன் ஒன்று ஆறுமுகத்தின் ஸ்கூட்டரை முந்திச்செல்ல முயன்றது. அப்போது அந்த வழியாக கோவையை நோக்கி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனால் பஸ் மீது மோதாமல் இருக்க கிரேன் டிரைவர் இடதுபுறமாக கிரேனை திருப்பியதாக தெரிகிறது. இதில் எதிர்பாராதவிதமாக ஆறுமுகம் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மீது கிரேன் மோதியது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் சென்ற ஆறுமுகம் இடதுபுறமாகவும், ஜோதிமணி வலது புறமாகவும் சாலையில் விழுந்தனர். இதையடுத்து கிரேனின் சக்கரம் ஜோதிமணியின் தலை மீது ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆறுமுகம் காயத்துடன் உயிர் தப்பினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கிரேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதிமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிரேனை சூலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த வழக்கில் தப்பி ஓடிய கிரேன் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story