பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பொள்ளாச்சியில் நடந்த பெண்கள் பாலியியல் சம்பவத்தை கண்டித்து கல்லூரி மாணவர்களின் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் குடும்ப பெண்களை ஒரு கும்பல் காதல் வலையில் வீழ்த்தி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்த விவகாரம் தமிழகத்தில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சியில் நடைபெற்ற இந்த சம்பவத்தை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிக தண்டனை வழங்கக்கோரியும் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைகல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுசெயலாளர் சங்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீதும், இதன் பின்னணியில் உள்ளவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தொழில் நுட்ப வளர்ச்சியை தவறாக கையாள்வதால், இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் மிகுந்த விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
இந்த சம்பவம் தமிழகத்திற்கு மிகப்பெரிய தலை குனிவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூகத்தில் இது போன்ற இழிசெயல்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் அதிகபட்சமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் சம்பவம் மிகவும் கொடூரமானது. ஆசிரியர்கள் மத்தியில் இந்த சம்பவம் பெருங்கோபத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் சுமூக உறவு நிலவும் வகையில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதுடன், கல்வி முறைகளிலும் மாற்றம் கொண்டு வரவேண்டும்.
குறிப்பாக கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கும் வகையில் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும். மேலும் இந்த குற்றச்செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் எவ்வித பாரபட்சம் இல்லாமல் அவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறினார்.
Related Tags :
Next Story