வாக்களிப்பதன் அவசியம் குறித்து அழைப்பிதழ் வடிவில் பேனர்கள் மண்ணச்சநல்லூர் தாலுகாவில் வருவாய்த்துறையினர் அசத்தல்


வாக்களிப்பதன் அவசியம் குறித்து அழைப்பிதழ் வடிவில் பேனர்கள் மண்ணச்சநல்லூர் தாலுகாவில் வருவாய்த்துறையினர் அசத்தல்
x
தினத்தந்தி 15 March 2019 10:30 PM GMT (Updated: 15 March 2019 8:39 PM GMT)

மண்ணச்சநல்லூர் தாலுகாவில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அழைப்பிதழ் வடிவில் பேனர்களை வருவாய் துறையினர் வைத்து அசத்தி வருகிறார்கள்.

சமயபுரம்,

தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம்(ஏப்ரல்) 18-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து வாட்ஸ்-அப், முகநூல் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து அழைப்பிதழ் வடிவில் பேனர்களை அச்சிட்டு மண்ணச்சநல்லூர் வருவாய்த்துறையினர் வைத்துள்ளனர்.
அந்த பேனரில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அன்புடையீர் நிகழும் மங்களகரமான ஸ்ரீவிகாரி வருடம், சித்திரை 5-ந் தேதி 18.4.2019 வியாழக்கிழமை சதுர்த்தசி திதியும், ஹஸ்தம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம்.

தங்கள் அருகாமையில் உள்ள வாக்கு சாவடியில் நடைபெறுவதால் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களின் வாக்கினை பதிவு செய்யுமாறு அழைக்கின்றோம்.

தங்கள் அன்புள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) திருச்சி மாவட்டம், 144.மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உள்ளடக்கிய 25.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி.

அவ்வண்ணமே கோரும் உதவி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் தாசில்தார் மண்ணச்சநல்லூர்.

அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும். வைபவம் பற்றிய மேல் விவரங்களுக்கு எண்.1950-ஐ தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது.

மண்ணச்சநல்லூர் தாசில்தார் ராஜேஷ் கண்ணன் மேற்பார்வையில் மண்டல துணை தாசில்தார் சங்கர நாராயணன் உள்ளிட்ட வருவாய் துறையினர் மண்ணச்சநல்லூர் எதுமலை பிரிவு ரோடு, சமயபுரம் நால்ரோடு, கொள்ளிடம், நெ.1.டோல்கேட் ரவுண்டானா, போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அழைப்பிதழ் வடிவில் வித்தியாசமான முறையில் பதாகைகளை வைத்துள்ளனர். அரசியல் வாதிகள், சினிமா நடிகர்களின் ரசிகர்கள், வைக்கும் பேனர்களை பார்த்து சலித்துப்போன பொதுமக்கள் இந்த வித்தியாசமான பேனரை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.

Next Story