மாவட்ட செய்திகள்

பெங்களூரு-ஹாவேரியில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனைஅரசு என்ஜினீயரிடம் ரூ.2¼ கோடி சிக்கியதுவாக்காளர்களுக்கு வினியோகிக்க பதுக்கலா? பரபரப்பு தகவல்கள் + "||" + Government Engineer Rs. 2¼ crore Embroiled

பெங்களூரு-ஹாவேரியில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனைஅரசு என்ஜினீயரிடம் ரூ.2¼ கோடி சிக்கியதுவாக்காளர்களுக்கு வினியோகிக்க பதுக்கலா? பரபரப்பு தகவல்கள்

பெங்களூரு-ஹாவேரியில் வருமானவரி அதிகாரிகள் அதிரடி சோதனைஅரசு என்ஜினீயரிடம் ரூ.2¼ கோடி சிக்கியதுவாக்காளர்களுக்கு வினியோகிக்க பதுக்கலா? பரபரப்பு தகவல்கள்
பெங்களூரு மற்றும் ஹாவேரியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அரசு என்ஜினீயர் தங்கிய ஓட்டல் மற்றும் அவரது வீட்டில் இருந்து ரூ.2¼ கோடி சிக்கியது.
பெங்களூரு,

கர்நாடகத்தில் உள்ள 28 நாடாளுமன்ற தொகுதி களுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது.

நாடாளுமன்ற தேர்தல்

முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 18-ந் தேதியும், 2-வது கட்டமாக 23-ந் தேதி 14 தொகுதி களுக்கும் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து 24 மணிநேரமும் தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

இதுபோல, நாடாளுமன்ற தேர்தலையொட்டி கணக்கில் வராத பணத்தை வெளியே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடும் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில், பெங்களூரு மற்றும் ஹாவேரியில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரூ.2¼ கோடியை கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓட்டலில் ரூ.2 கோடி சிக்கியது

அதாவது ஹாவேரி மாவட்டத்தில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையின் நிர்வாக பொறியாளராக (என்ஜினீயர்) பணியாற்றி வருபவர் நாராயணகவுடா பட்டீல். இவர், ஹாவேரி டவுன் நந்தினி லே-அவுட்டில் வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெங்களூரு மெஜஸ்டிக் அருகே அனந்தராவ் சர்க்கிளில் உள்ள ஒரு ஓட்டலில் என்ஜினீயர் நாராயணகவுடா 2 அறைகள் எடுத்து தங்கி இருப்பதாகவும், அங்கு அவர் பல லட்சம் ரூபாயை பதுக்கி வைத்திருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரி களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் நாராயண கவுடா தங்கி இருந்த ஓட்டலின் அறைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு அறையில் 100, 200, 500, 2,000 ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி அதிகாரிகள் எண்ணினார்கள். அப்போது ரூ.2 கோடிக்கும் மேல் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

என்ஜினீயர் தப்பி ஓட்டம்

இதற்கிடையில், வருமான வரித்துறை அதிகாரிகள் வருவது பற்றி அறிந்த என்ஜினீயர் நாராயணகவுடா ஓட்டலில் இருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. அதாவது அந்த ஓட்டலில் ஒரு அறையில் அவர் தங்கி இருந்ததும், மற்றொரு அறையில் பணம் உள்ளிட்ட பொருட்களை நாராயணகவுடா வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. அவர் தங்கி இருந்த அறையில் இருந்த மடிக்கணினி, முக்கிய ஆவணங்கள் ஆகியவை அதிகாரிகள் கையில் சிக்கியது. அவற்றை அவர்கள் கைப்பற்றி எடுத்து சென்றுள்ளனர்.

அதே நேரத்தில் நாராயணகவுடா தங்கி இருந்த ஓட்டலில், அவர் தனக்கு சொந்தமான காரை விட்டுச் சென்றிருந்தார். இதையடுத்து, அந்த காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் நாராயணகவுடாவின் கார் டிரைவரும் அதிகாரிகளிடம் சிக்கினார். அவரிடம் நாராயண கவுடா குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வீட்டில் ரூ.25 லட்சம்

பெங்களூருவை போன்று ஹாவேரி மாவட்டம் நந்தினி லே-அவுட்டில் உள்ள நாராயணகவுடாவின் வாடகை வீட்டிலும் நேற்று அதிகாலையில் பெங்களூருவில் இருந்து சென்றிருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் சோதனை நடத்தினார்கள். அப்போது நாராயணகவுடாவின் மனைவி மட்டும் வீட்டில் இருந்தார். பின்னர் வீடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது நாராயண கவுடாவின் வீட்டில் இருந்து ரூ.25 லட்சம் ரொக்கம், தங்க நகைகள், சொத்து பத்திரங்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியதாகவும், அதனை அவர்கள் கைப்பற்றி எடுத்து சென்றிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

வாக்காளர்களுக்கு கொடுக்க...

கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறையின் தலைமை என்ஜினீயராக இருக்கும் நாராயணகவுடா, அந்த துறை தொடர்பாக நடைபெறும் அனைத்து பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து 10 முதல் 20 சதவீதம் வரை கமிஷன் பெற்று வந்ததாக தெரிகிறது. அவ்வாறு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்த கமிஷன் தொகையை தான் அந்த ஓட்டலில் நாராயணகவுடா பதுக்கி வைத்திருந்ததாகவும், இதுபற்றிய தகவல் அறிந்ததும் வருமான வரித்துறை அதிகாரிகள் ஓட்டலில் சோதனை நடத்திய போது ரூ.2 கோடி சிக்கியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து கமிஷனாக பெற்றுள்ள பணத்தை, தனக்கு தெரிந்த அரசியல் பிரமுகரிடம் கொடுக்க நாராயணகவுடா வைத்திருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதனால் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுக்க அந்த பணம் ஓட்டலில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததா? என்ற சந்தேகமும் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது. அதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அத்துடன் நாராயணகவுடாவுக்கு நெருக்கமான அரசியல் பிரபலங்கள் குறித்த தகவல்களையும் அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். மேலும் தலைமறைவாகிவிட்ட என்ஜினீயர் நாராயணகவுடாவை தேடும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.2¼ கோடி சிக்கிய சம்பவம் கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.