கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 16 March 2019 3:51 AM IST (Updated: 16 March 2019 3:51 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி மேலவரப்பங்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலவரப்பங்குறிச்சி கிராமத்தில் உள்ள புதுகாலனி தெருவில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 40 ஆண்டுக்கு முன்னர் கீழவரப்பங்குறிச்சி கொள்ளிடம் ஆற்றங்கரை அருகே வசித்து வந்தனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

பின்னர், இவர்களுக்கு அரசு சார்பில் மேலவரப்பங்குறிச்சி புதுகாலனி தெருவில் இடம் வழங்கப்பட்டது. இங்கு வீடு கட்டி வசித்து வருகின்றனர். ஆனால், இன்று வரை இவர்களுக்கு அரசு பட்டா வழங்கவில்லை. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஒன்று திரண்டு, பட்டா வழங்கக்கோரி ஏலாக்குறிச்சி-தூத்தூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் ஆய்வாளர் அய்யப்பன், கிராம நிர்வாக அதிகாரி புண்ணியமூர்த்தி மற்றும் தூத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் தரப்பில், எங்கள் பகுதிக்கு பட்டா வழங்க வேண்டும், பயணிகள் நிழற்குடை, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் மயானத்திலிருந்து, கொள்ளிடம் ஆற்றுக்கு செல்ல சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும் ஆகிய 4 கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதற்கு வருவாய் ஆய்வாளர் அய்யப்பன், தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின் ஒரு வாரத்திற்குள் இவை அனைத்தையும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக் கப்படும் என உறுதியளித்தார். அதன்பேரில், சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப் பட்டது.

Next Story