மும்பை நடைமேம்பால விபத்தில் பலி 6 ஆக உயர்வு: உயிர்காக்கும் பணிக்கு சென்ற 3 நர்சுகள் உயிரிழந்த பரிதாபம் உருக்கமான தகவல்கள்
மும்பை நடைமேம்பால விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்து உள்ளது. இதில் உயிர்காக்கும் பணிக்கு சென்ற நர்சுகள் 3 பேர் உயிரிழந்த உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
மும்பை,
மும்பை சி.எஸ்.எம்.டி. தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் பரபரப்பான ரெயில்நிலையம் ஆகும். சி.எஸ்.எம்.டி. முதல் பிளாட்பாரத்தையும், டைம்ஸ் ஆப் இந்தியா அலுவலகம் அருகே உள்ள பி.டி.லேனையும் இணைக்கும் வகையில் ஹிமாலயா நடைமேம்பாலம் அமைந்து இருந்தது. இது கடந்த 1988-ம் ஆண்டு மாநகராட்சியால் கட்டப்பட்டதாகும்.
மும்பை தாக்குதலின் போது பாகிஸ்தான் பயங்கரவாதி கசாப் இந்த வழியாக சென்று தாக்குதல் நடத்தியதால், இந்த நடைமேம்பாலம் கசாப் பாலம் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
6 பேர் பலி
நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த நடைமேம்பாலம் வழியாக சென்று கொண்டு இருந்தனர். அப்போது பாலத்தின் பெரும்பாலான பகுதி திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. சில வினாடிகளில் நடந்த இந்த விபத்தில் பாலத்தில் நடந்து சென்றவர்கள் கொத்து கொத்தாக கீழே விழுந்தனர். அவர்கள் பாலத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
பாலம் இடிந்து விழுந்தபோது, கீழே செல்லும் சாலையின் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டு இருந்தது. அப்போது வாகனங்கள் பாலத்தின் கீழ் செல்லாததால் அதிக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.
விபத்து நடந்ததும் பொதுமக்கள் பதறியடித்து கொண்டு மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார், தீயணைப்பு படையினர், பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள ஜி.டி. மற்றும் செயின்ட் ஜார்ஜ் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்து இருந்தனர். சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. 31 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உருக்கமான தகவல்கள்
இந்த விபத்தில் பலியானவர்களில் 3 பேர் ஜி.டி. அரசு ஆஸ்பத்திரி நா்சுகள் என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த நர்சுகள் ரஞ்சனா (வயது 40) மற்றும் அபூர்வா (35) தானே மாவட்டம் டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இரவு பணிக்கு செல்வதற்காக சி.எஸ்.எம்.டி.யில் இருந்து ஆஸ்பத்திரிக்கு இந்த நடைமேம்பாலம் வழியாக சென்றபோது தான், கோர சம்பவம் நிகழ்ந்து உள்ளது.
இதேபோல பணி முடிந்து வீட்டுக்கு சென்ற ஜி.டி. அரசு ஆஸ்பத்திரி நர்சு பக்தி ஷிண்டேவும்(40) விபத்தில் சிக்கி உயிரிழந்து உள்ளார். அவரும் டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர் ஆவார்.
அஞ்சலி
உயிர்காக்கும் பணிக்கு சென்ற நர்சுகள் பாலம் இடிந்த விபத்தில் சிக்கி பலியான சம்பவம் ஜி.டி. ஆஸ்பத்திரி ஊழியர்கள், டாக்டர்கள் இடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் உயிரிழந்த நர்சுகளுக்கு நேற்று ஜி.டி. ஆஸ்பத்திரியில் இரங்கல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது ஆஸ்பத்திரி ஊழியர்கள், டாக்டர்கள் கண்ணீருடன் உயிரிழந்த 3 நர்சுகளுக்கும் அஞ்சலி செலுத்தினர்.
மேலும் 3 பேர்
மேலும் தானேயை சேர்ந்த மோகன் (58), மும்பை காட்கோபரில் கடை வைத்து நடத்தி வரும் சாகித்கான் (32), மும்பை வடலாவை சேர்ந்த தபேந்திர சிங் (28) ஆகியோரும் நடைமேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் என தெரியவந்தது.
இதில் மோகன் மும்பை ஜவேரி பஜாரில் நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். தபேந்திர சிங் சி.எஸ்.எம்.டி. பகுதியில் உள்ள நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர்கள் மின்சார ரெயிலில் வீடு திரும்ப ரெயில் நிலையம் சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.
மோடி அதிர்ச்சி
இந்த நடைமேம்பால விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி அதிர்ச்சி அடைந்தார். உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து உள்ளார்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை நேற்று முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேரில் சென்று நலம் விசாரித்தார். நடைமேம்பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தில், அலட்சியத்துக்கு காரணமான அதிகாரிகள் யார் என்பதை உடனே கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மாநகராட்சி கமிஷனர் அஜாய் மேத்தாவுக்கு முதல்-மந்திரி உத்தரவு பிறப்பித்தார்.
Related Tags :
Next Story