பொள்ளாச்சி பாலியல் சம்பவம் எதிரொலி, உடுமலை கல்லூரிகள் முன்பு போலீஸ் குவிப்பு


பொள்ளாச்சி பாலியல் சம்பவம் எதிரொலி, உடுமலை கல்லூரிகள் முன்பு போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 15 March 2019 11:04 PM GMT (Updated: 15 March 2019 11:04 PM GMT)

பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்துவதற்கு மாணவர்கள் ஒன்று திரள்வதை தடுக்கும் வகையில் உடுமலையில் கல்லூரிகளுக்கு முன்பு நேற்று போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

உடுமலை, 

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடுமை சம்பவத்தைக்கண்டித்து நேற்று முன்தினம் பல்வேறு ஊர்களில் கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தினர். உடுமலையில் அரசு கலைக்கல்லூரி மாணவ -மாணவிகள் 2 நாட்களாக வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரிக்கு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரி மாணவிகள் நேற்று முன்தினம் உடுமலையில் 3 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொள்ளாச்சி சம்பவத்தைக்கண்டித்து போராட்டம் தீவிரமடைந்து வந்த நிலையில் உடுமலையில் உள்ள ஸ்ரீஜி.வி.ஜி.விசாலாட்சி மகளிர் கல்லூரிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டிருந்தது.

இருப்பினும் நேற்று கல்லூரிக்கு முன்பு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். உடுமலை அரசு கலைக்கல்லூரி, வித்யாசாகர் கலை அறிவியல் கல்லூரி ஆகிய கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்து. இந்த 2 கல்லூரிகளிலும் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி நேற்று செய்முறை தேர்வு நடந்தது.

அந்த கல்லூரிகளுக்கு முன்பும் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கல்லூரி நுழைவுவாயில் முன்பு பேராசிரியர்கள் நின்று கொண்டு செய்முறை தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை மட்டும் அவர்களது அடையாள அட்டைகளை பார்த்துவிட்டு கல்லூரிக்குள் செல்ல அனுமதித்தனர்.

கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது தெரியாமல் கல்லூரிக்கு வந்த மாணவ-மாணவிகளிடம் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது குறித்து தெரிவிக்கப்பட்டது. அதனால் அந்த மாணவ-மாணவிகள் வீடுகளுக்குத் திரும்பிச்சென்றனர். உடுமலை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், சப் -இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கல்லூரி மாணவர்கள் சிலர் மத்திய பஸ் நிலையத்தில் நின்றனர். மாணவர்கள் ஒன்று சேர்ந்தால் போராட்டம் நடத்துவார்கள் என்று கருதிய போலீசார் அந்த மாணவர்களை அவரவர் ஊர்களுக்கு செல்லும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 

Next Story