விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டக்கோரி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 176 பேர் கைது


விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்டக்கோரி ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற 176 பேர் கைது
x
தினத்தந்தி 15 March 2019 9:45 PM GMT (Updated: 15 March 2019 11:05 PM GMT)

மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்டக்கோரி ரெயில் மறியலுக்கு முயன்ற தேவரின் தேச பக்தி முன்னணி அமைப்பினர் 176 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

அனைத்து பார்வர்டு பிளாக் மற்றும் தேவர் அமைப்பினர் இணைந்து தேவரின் தேச பக்தி முன்னணி என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள் மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை சூட்ட வேண்டும், தமிழக பாட புத்தகங்களில் தேவரின் உண்மையான வரலாற்றை இடம்பெற செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் கடந்த மாதம் கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் தேவரின் தேச பக்தி முன்னணி சார்பில் ரெயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி அந்த அமைப்பின் சார்பில் கதிரவன், ஸ்ரீதர்வாண்டையார், முருகன், திருமாறன் ஆகியோர் நேற்று காலை ரெயில் நிலையம் அருகே உள்ள மேலவெளி வீதி பகுதியில் கூடினார்கள்.

இதையொட்டி மாநகர போலீஸ் துணை கமிஷனர் சசிமோகன் தலைமையில் போலீசார் ரெயில்நிலையம் முன்பு குவிக்கப்பட்டு இருந்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் யாரும் ரெயில் நிலையத்திற்குள் உள்ளே நுழைய முடியாதபடி போலீசார் ரெயில் நிலையத்தை சுற்றிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

அப்போது தேவர் சேத பக்தி முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் கதிரவன் தலைமையில் ரெயில் நிலையத்தின் கிழக்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். உடனே அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து ரெயில் மறியலுக்கு முயன்றதாக கதிரவன், ஸ்ரீதர்வாண்டையர், முருகன், திருமாறன் உள்ளிட்ட 176 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி சென்று திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Next Story