கர்நாடக மாநிலத்திற்கு சென்று மோட்டார்சைக்கிள்கள் திருடிய 2 பேர் கைது ஜோலார்பேட்டை போலீசார் அதிரடி
கர்நாடக மாநிலத்திற்கு சென்று மோட்டார்சைக்கிள்களை திருடி வந்த 2 பேரை ஜோலார்பேட்டை போலீசார் அதிரடியாக மடக்கிப்பிடித்தனர்.
ஜோலார்பேட்டை,
ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி தலைமையில் போலீசார் பொன்னேரி கூட்டுரோடு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களை நிறுத்த முயன்றபோது நிற்காமல் செல்ல முயன்றனர். போலீசார் செயல்பட்டு இருவரையும் அதிரடியாக மடக்கிப்பிடித்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பேசினர். அவர்கள் வந்த மோட்டார்சைக்கிளை சோதனையிட்டபோது திருட்டு மோட்டார்சைக்கிள் என்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்களில் ஒருவர் பள்ளிகொண்டா அருகே உள்ள அகரம்சேரியை அடுத்த க.புதூரை சேர்ந்த ராஜாராம் மகன் பன்னீர்செல்வம் (வயது 36) என்பதும் மற்றொருவர் திருவண்ணாமலை மாவட்டம் சென்னாங்குப்பத்தை சேர்ந்த குட்டி என்ற நயினார் மகன் ராஜா என்கிற இளையராஜா என்கிற குட்டி (32) என்பதும் தெரியவந்தது
இவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு சென்று 3 மோட்டார்சைக்கிள்களை திருடி வந்ததையும், நாட்டறம்பள்ளியை அடுத்த கந்திலியில் ஒரு மோட்டார்சைக்கிள் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். மேலும் கடந்த ஆண்டு ஜோலார்பேட்டையில் தரணி என்ற பெண்ணிடம் 9 பவுன் நகையையும் பறித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின்பேரில் இருவர் வீட்டிற்கும் சென்று இவர்கள் திருடிய ரூ.6½ லட்சம் மதிப்புள்ள 3 மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 9 பவுன் நகைகளை மீட்டனர். பின்னர் இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story