கரூர் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை


கரூர் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1½ லட்சம் பறிமுதல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 15 March 2019 11:23 PM GMT (Updated: 15 March 2019 11:23 PM GMT)

கரூர் அருகே உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.1½ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

கரூர்,

நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து உள்ளது. இதனையொட்டி வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பறக்கும் படை அதிகாரிகள் சுழற்சி அடிப்படையில் 24 மணி நேரமும் மாவட்ட மற்றும் நகர எல்லைகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்று காலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ராஜவேல், சிறப்பு சார்ஆய்வாளர் ராமையா மற்றும் போலீசார் அடங்கிய பறக்கும் படை குழுவினர் கரூர் அருகே உள்ள வேப்பம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக, கரூரில் இருந்து புறப்பட்டு தென்னிலையை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த சிவக்குமார் என்பவரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது அவரது காரில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வாகன எண், பெயர் விவரம் உள்ளிட்டவற்றை குறித்து வைத்து கொண்டு அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். நேற்று முன்தினம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மருதூர் சோதனைச்சாவடியில் கூட்டுறவுத்துறை சார்பதிவாளர் குமார், சிறப்பு சார்ஆய்வாளர் கருப்பண்ணன் ஆகியோர் அடங்கிய குழுவினர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்து 210-ஐ பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும். பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் விவரங்களை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்பழகனின் பார்வைக்கு அனுப்பி வைத்து, பின்னர் கரூர் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரவணமூர்த்தி (கரூர் சட்டமன்றத்தொகுதி), லியாகத்(குளித்தலை சட்டமன்றத்தொகுதி) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபர்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில் அவர்களின் தொகை திருப்பி அளிக்கப்படும். இதற்காக மாவட்ட ஊரகவளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா தலைமையில் மேல்முறையீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story