மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா: தமிழக-கேரள மாநில அதிகாரிகள் ஆலோசனை


மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா: தமிழக-கேரள மாநில அதிகாரிகள் ஆலோசனை
x
தினத்தந்தி 17 March 2019 4:00 AM IST (Updated: 16 March 2019 10:58 PM IST)
t-max-icont-min-icon

மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழாவையொட்டி தமிழக-கேரள அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

கம்பம்,

கூடலூர் அருகே உள்ள பளியன்குடியில் இருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவில் மங்கலதேவி மலை உள்ளது. தமிழக-கேரள எல்லையில் உள்ள இங்கு மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் இக்கோவில் கட்டப்பட்டது.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முழு நிலவு நாளன்று மங்கலதேவி என்ற கண்ணகிக்கு விழா கொண்டாடப்படுகிறது. தமிழக-கேரள மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் திருவிழாவில் பங்கேற்பது வழக்கம். அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி சித்திரை முழு நிலவு விழா கொண்டாடப்பட உள்ளது.

இது தொடர்பாக தமிழக-கேரள அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கம்பம் நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட கலெக்டர் தினேஷன் முன்னிலை வகித்தார்.

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், உத்தமபாளையம் சப்-கலெக்டர் வைத்திநாதன், மாவட்ட வனக்காப்பாளர் சச்சின் போஸ்லே, இடுக்கி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால், பெரியார் புலிகள் சரணாலய துணை இயக்குனர் சில்பா மற்றும் இரு மாநிலங்களை சேர்ந்த வனத்துறை, போக்குவரத்துத்துறை, மருத்துவத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் பல்லவி பல்தேவ் பேசும்போது கூறியதாவது:-

மங்கலதேவி கோவிலுக்கு செல்ல காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பக்தர்களின் வசதிக்காக நடமாடும் கழிப்பறைகள் ஆங்காங்கே வைக்கப்படும். குடிநீர் வசதிகள் செய்து தரப்படும். அன்னதானம் வழங்குவோர், உணவுகளை வீணாக்கக்கூடாது.

அனுமதிக்கப்பட்ட வாகனங்களை, அன்றைய தினம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தமிழக பக்தர்கள், கோவிலுக்கு சென்று வர ஆங்காங்கே உதவி மையங்கள் அமைக்கப்படும். பளியன்குடி மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு மருத்துவம், குடிநீர் மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும்.

குமுளியில் இருந்து கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரமைக்கப்படும். பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கோவில் திருவிழாவை அமைதியான முறையில் நடத்த இரு மாநில பக்தர்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கம்பத்தில் ஆலோசனை கூட்டம் நடந்ததால் தமிழக பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக பக்தர்கள் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில், மங்கல தேவி கண்ணகி அறக்கட்டளை சார்பில் 3 நாட்கள் விழா நடத்தவும், 10 இடங்களில் தண்ணீர் தொட்டி வைக்கவும் அனுமதிக்க வேண்டும். பக்தர்கள் ஓய்வு எடுப்பதற்கு 5 இடங்களில் பந்தல் அமைக்க வேண்டும். வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இதேபோல் கற்புக்கரசி மங்கலதேவி அறக்கட்டளை சார்பில், தமிழக அறநிலையத்துறை மூலம் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும். பளியன்குடி மலைப்பாதையை சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.

கேரள கண்ணகி அறக்கட்டளை சார்பில் கொடுத்த மனுவில், கண்ணகி கோவிலில் வருடத்துக்கு 24 நாட்கள் வழிபாடு நடத்த கேரள அரசுக்கு, அம்மாநில தேவசம்போர்டு கடந்த ஆண்டு அனுமதி அளித்துள்ளது.

இதேபோல் தமிழக அரசும் வழிபாடு நடத்துவது தொடர்பாக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

கூட்டத்தில் பங்கேற்ற கேரள அதிகாரிகளுக்கு, தமிழக அதிகாரிகள் நினைவு பரிசுகளை வழங்கினர். கண்ணகி கோவில் திருவிழா தொடர்பான ஆலோசனை கூட்டம் முதன் முறையாக தமிழக பகுதியான கம்பத்தில் நடைபெற்றதால் தமிழக பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story