மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசின் குடும்ப பின்னணி என்ன?திடுக்கிடும் தகவல்கள் + "||" + Pollachi sex case The arrested thirunavukkarasu What is family background Startling information

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசின் குடும்ப பின்னணி என்ன?திடுக்கிடும் தகவல்கள்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசின் குடும்ப பின்னணி என்ன?திடுக்கிடும் தகவல்கள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான திருநாவுக்கரசின் குடும்ப பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனைமலை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகள், இளம்பெண்களை ஏமாற்றி காதல் வலையில் வீழ்த்தி சீரழித்த வழக்கில் மாக்கினாம்பட்டியைச் சேர்ந்த பைனான்சியர் திருநாவுக்கரசு (வயது 27) உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் பின்னணியில் சிலர் இருப்பதாகவும், அவர்களை தப்பிக்க வைக்க போலீசார் முயற்சிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். அடுத்தகட்ட நடவடிக்கையாக சி.பி.ஐ. விசாரணைக்கும் தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. இதன் அடிப்படையில் அந்த விசாரணையும் விரைவில் தொடங்க உள்ளது.


இந்தநிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள திருநாவுக்கரசை சி.பி.சி.ஐ.டி.போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.முன்னதாக திருநாவுக்கரசின் பண்ணை வீடுகள் மற்றும் குடியிருக்கும் வீடுகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.அங்கு வசிக்கும் பொதுமக்களிடமும் விசாரித்தனர்.திருநாவுக்கரசின் குடும்ப பின்னணி குறித்து தகவல்களை திரட்டியுள்ளனர்.அதன் விவரம் வருமாறு:-

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை அருகே உள்ள சின்னப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது 2-வது மனைவிக்கு பிறந்த மகன்தான் திருநாவுக்கரசு. இவரது தந்தையான கனகராஜிக்கு ஆரம்பகாலங்களில் வசதி வாய்ப்புகள் குறைவு. டீத்தூள் விற்பனை செய்து வந்துள்ளார். இவரது முதல் மனைவி அவரது நெருங்கிய உறவினரின் பெண். அவரது தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் திருமணத்தின்போது 100 பவுன் நகை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. அந்த நகைகளை விற்று கனகராஜ் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலை தொடங்கினார். கடந்த 2002, 2003-ம் ஆண்டுகளில் போதிய மழை இன்றி கடும் வறட்சி ஏற்பட்டது. அப்போது 2, 3 ஏக்கர் நிலம் வைத்திருந்த விவசாயிகள் பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

அவ்வாறு பாதிக்கப்பட்ட சின்னப்பம்பாளையம், தாத்தூர், சுப்பேகவுண்டன் புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகளை தேடிப்பிடித்து அதிக வட்டிக்கு கடன் கொடுத்துள்ளார் கனகராஜ். அதற்கு ஈடாக கடன் வாங்கிய விவசாய நிலங்களை எழுதி வாங்கிக்கொண்டார். இதனால் 80 ஏக்கர் நிலங்களுக்கு மேல் வந்துள்ளது. அதனை அவர், கூடுதல் விலைக்கு விற்றதில் கனகராஜிடம் கோடிக்கணக்கில் பணம் புரண்டது. கனகராஜிக்கு முதல் மனைவி மூலம் 2 மகள்கள் பிறந்துள்ளனர். அதன் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை கனகராஜ் பிரிந்தார்.உறவினர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையின்படி மாதம்தோறும் கனகராஜ் தனது மனைவிக்கு குறிப்பிட்ட தொகையை ஜீவனாம்சமாக கொடுத்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கனகராஜ் 2-வதாக லதா என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு பிறந்தவர்தான் திருநாவுக்கரசு. தங்கை ஒருவர் உள்ளார். அவர் பல் மருத்துவம் படித்து வருவதாக தெரிகிறது.

திருநாவுக்கரசு படிக்கும் காலத்திலேயே தனது தந்தை கனகராஜின் வட்டித் தொழிலையும் கவனித்து வந்தார். இதனால் பணம் அதிகளவில் புரண்டதால் தடம் மாறத்தொடங்கினார். இந்த காலகட்டத்தில்தான், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரின் காரை திருநாவுக்கரசு தனது நண்பர்களுடன் சேர்ந்து தீ வைத்து கொளுத்தினார்.

இதுதொடர்பாக ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரை போலீசார் ஏற்க மறுத்தபோது, அதிக வட்டியால் தங்கள் சொத்துக்களை இழந்த சின்னப்பம்பாளையம் மக்கள் கனகராஜிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகே போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக் கரசு உள்பட சிலரை கைது செய்தனர். இதனால் தனக்கு பெரிய அவமானம் ஏற்பட்டு விட்டதாக கருதிய கனகராஜ் குடும்பத்தோடு சின்னப்பம்பாளையத்தை காலி செய்து பொள்ளாச்சிக்கு குடிபெயர்ந்தார்.

இந்த நிலையில் திருநாவுக்கரசு கடந்த 2 ஆண்டுகளாக ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். அந்த பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் கூறி உள்ளார். அடிக்கடி அந்த பெண்ணுடன் சின்னப்பம்பாளையம் வீட்டிற்கும் வந்தும் தங்குவாராம். ஆனால் திருநாவுக்கரசின் சில தகாத செயல்கள் அந்த பெண்ணுக்கு பிடிக்கவில்லை.

இதனால் காதலித்த பெண்ணின் மனம், பேதலிக்க தொடங்கியது. நாளடைவில் அவரை வெறுக்க தொடங்கினார். விட்டு விலகியும் சென்று விட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து திருநாவுக்கரசு திருமணம் செய்து கொள்ளவில்லை. அடிக்கடி தனது நண்பர்களுடன் காரில் வரும் திருநாவுக்கரசு சின்னப்பம்பாளையம் வீட்டிற்கு வந்து தங்குவார். மது அருந்திவிட்டு கும்மாளமிடுவது வாடிக்கையாக இருந்தது. அப்போதுதான் இந்த பெண்களை அழைத்து வந்து தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார். திருநாவுக்கரசையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ததோடு மட்டுமின்றி, கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கிராம மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர். மேற்கண்டவாறு தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சின்னப்பம்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிலர் தெரிவித்த தகவலில், அங்கு உள்ள வீட்டுக்கு கனகராஜ் மற்றும் திருநாவுக்கரசு வந்து செல்வார்கள். வீடு எப்போதும் பூட்டிக்கிடப்பது போன்றே காணப்படும். ஆனால் வீட்டுக்குள் மின்விசிறி சுற்றும். சில வேளைகளில் ஆட்கள் இருப்பது போல் சத்தம் கேட்கும். அடிக்கடி அதிகாலை வேளையில் அந்த வீட்டில் இருந்து கார் புறப்பட்டு செல்லும். பெரும்பாலும் இரவு 11 மணிக்கு மேல் காரில் திருநாவுக்கரசு பெண்களுடன் வருவார். இதனை யாராவது பார்த்தாலும் கண்டு கொள்ள மாட்டார்கள். பிரச்சினை ஏதேனும் வந்தால் பார்த்துக்கொள்ளலாம். அல்லது நமக்கு ஏன்? பிரச்சினை என்று விட்டுவிடுவார்கள். மேலும் அவர்களிடம் பணபலம் உள்ளது. மேலும் பெரிய வி.ஐ.பி.களின் பின்னணியும் உள்ளது என்பதால் அவர்கள் வீட்டை பற்றியும், அவர்களை பற்றியும் வெளியே சொல்வது இல்லை. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிகாலையில் இரு பெண்கள் ஆட்டோவில் வந்து இறங்கினர். அப்போது அவர்களிடம் விசாரித்தபோது, எங்களுடன் உல்லாசமாக இருந்த திருநாவுக்கரசு ஆனைமலைக்கு தனது காரில் அழைத்துச் சென்று எங்கள் ஏ.டி.எம். கார்டை வாங்கி அனைத்து பணத்தையும் எடுத்துக்கொண்டு எங்களை தவிக்கவிட்டு சென்று விட்டார் என்று புலம்பினர். அந்த பெண்கள் யார்? என்பது தெரியவில்லை. அவர்கள் கல்லூரி பெண்களைப்போல அழகாக இருந்தனர்.

மேலும் சமீபத்தில் இதே பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டிற்கு சென்று அதிகாலையில் ஒரு இளம் பெண் தன்னை காப்பாற்றும்படி கூக்குரலிட்டுள்ளார். அப்போது அந்த பெண் தன்னை திருநாவுக்கரசு ஏமாற்றி விட்டதாக கதறி அழுதுள்ளார். பின்னர் அந்த பெண்ணை அம்பராம்பாளையம் சுங்கம் வரை அழைத்துச் சென்று பஸ்சில் ஏற்றி பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் திருநாவுக்கரசின் லீலைகள் தற்போது தான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றனர்.