மதுரையில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் தற்கொலை ராக்கிங் கொடுமை காரணமா? போலீசார் விசாரணை


மதுரையில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் தற்கொலை ராக்கிங் கொடுமை காரணமா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 17 March 2019 3:15 AM IST (Updated: 17 March 2019 4:02 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். ‘ராக்கிங்’ கொடுமை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை,

மதுரை செல்லூர் பகுதியை சேர்ந்தவர் பரத் (வயது 18), பி.பீ.குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (18), செல்லூர் அருள்தாஸ்புரத்தை சேர்ந்தவர் பழனிக்குமார் (18). நண்பர்களான இவர்கள் 3 பேரும் தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராஜர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். கடந்த 1-ந் தேதி இரவு பரத் விஷம் குடித்த நிலையில் வீட்டில் மயங்கி கிடந்தார்.

உடனே பெற்றோர் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு வரும் வழியிலேயே பரத் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதே நேரத்தில் முத்துப்பாண்டியும் வீட்டில் விஷம் குடித்தது தெரியவந்தது. உடனே அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முத்துப்பாண்டி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே முத்துப்பாண்டியின் தாயார் சித்ராதேவி, தல்லாகுளம் உதவி போலீஸ் கமிஷனரிடம் கொடுத்த புகாரில் “எனது மகன் மற்றும் பழனிக்குமார், பரத் ஆகிய 3 பேரும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் கல்லூரியில் ஒற்றுமையாக இருப்பது, சக மாணவர்கள் சிலருக்கு பிடிக்கவில்லை. எனவே அவர்களை மற்ற மாணவர்கள் கேலியும், கிண்டலும் செய்துள்ளனர். இதுகுறித்து முத்துப்பாண்டி என்னிடம் கூறினான். நானும் கல்லூரிக்கு சென்று கேட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். இந்த நிலையில் தான் கடந்த 1-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்து சாப்பிட்ட உடனே அவனது அறைக்கு சென்று விட்டான். சிறிது நேரத்தில் முத்துப்பாண்டி வாந்தி எடுக்கும் சத்தம் கேட்டு உள்ளே சென்று பார்த்தேன். அப்போது அவன் விஷம் குடித்தது தெரியவந்தது. உடனே அவனை நான் மதுரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சேர்த்தேன். அதே நேரத்தில் அவனது நண்பர்களும் வீட்டில் விஷம் குடித்ததாக எனக்கு தெரியவந்தது” என கூறியிருந்தார். எனவே ராக்கிங் கொடுமையால் இந்த சம்பவம் நடந்திருப்பதாக கூறி அப்போது தல்லாகுளம் போலீசார் மனு ரசீது வழங்கினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் கூறுகையில், “உடன் படிக்கும் மாணவர்கள் கேலி செய்ததால், பரத், முத்துப்பாண்டி, பழனிக்குமார் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்து கொள்வது என தீர்மானித்தனர். அதன்படி கடையில் விஷம் வாங்கி அதனை குளிர்பானத்தில் கலந்து 3 பேரும் வைத்துகொண்டனர். பின்னர் வீட்டிற்கு சென்று அவர்கள் ஒரே நேரத்தில் விஷத்தை குடிக்க முடிவு செய்தனர். அதன்படி அவர்களுக்குள் பேசி வைத்து 1-ந் தேதி இரவு விஷத்தை குடித்தனர். இதில் பரத்தும், முத்துப்பாண்டியும் இறந்துவிட்டனர். ஆனால் பழனிக்குமார் மட்டும் விஷத்தை குடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. ராக்கிங் கொடுமை காரணமாகத்தான் அவர்கள் தற்கொலை செய்தார்களா? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். இந்த சம்பவம் தொடர்பாக அவர்களுடன் படித்த மாணவர்களிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது” என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story