பேரணாம்பட்டு அருகே நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது விடுவிக்கக்கோரி வனத்துறை ஜீப் முற்றுகை


பேரணாம்பட்டு அருகே நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது விடுவிக்கக்கோரி வனத்துறை ஜீப் முற்றுகை
x
தினத்தந்தி 16 March 2019 9:45 PM GMT (Updated: 16 March 2019 10:33 PM GMT)

பேரணாம்பட்டு அருகே நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்கக்கோரி அவரது உறவினர்கள் வனத்துறையினரின் ஜீப்பை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பேரணாம்பட்டு, 

பேரணாம்பட்டு வனச்சரகர் சங்கரய்யா மற்றும் வனத்துறையினர் அத்திகுப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் 3 பேர் துப்பாக்கியுடன் சுற்றிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து வனத்துறையினர் அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் ஒருவர் பிடிபட்டார். மற்ற 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

அதைத் தொடர்ந்து வனத்துறையினர் பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில், கோட்டை சேரியை சேர்ந்த முரளி (வயது 38) என்பதும், இவரும், தப்பி ஓடியவர்களும் சேர்ந்து சாராயம் காய்ச்சுவதும், வனவிலங்குகளை வேட்டையாடுவதும் தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் முரளியை கைது செய்து, அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து வனத்துறையினர் முரளியை ஜீப்பில் ஏற்றிக்கொண்டு பேரணாம்பட்டு வனத்துறை அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவரது உறவினர்கள் ஜீப்பை முற்றுகையிட்டு, அவரை விடுவிக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து துப்பாக்கியுடன் பிடிபட்டதால் அவரை விடுவிக்க முடியாது என கூறி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் முரளியை குடியாத்தம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

மேலும் தப்பி ஓடிய ராமு (30), வெங்கடேசன் (35) ஆகியோரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story