மாற்றுத்திறனாளிகள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி வலியுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான முறையான வாக்காளர் கல்வி மற்றும் தேர்தலில் பங்கேற்பது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கூறியதாவது;- இந்திய தேர்தல் ஆணையம் நடைபெற உள்ள தேர்தலில் எந்த ஒரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் விடுபடக்கூடாது எனவும், மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்குப்பதிவு நாளன்று தவறாமல் வாக்களிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 11 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களாக கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு வாக்குச்சாவடி மையங்களில் தேவையான சாய்தள வசதிகள், குடிநீர், கழிப்பறை வசதிகள், சக்கர நாற்காலி மற்றும் வாக்களிக்க ஏதுவாக தனியாக வரிசை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். மேலும் பார்வையற்றவர்கள் வாக்களிக்க ஏதுவாக பிரெய்லி மூலம் வடிவமைக்கப்பட்ட வாக்குச்சீட்டு, பேலட் பேப்பர், கையேடு உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. வாக்களிப்பது உங்களின் கடமை மற்றும் ஜனநாயக உரிமை என்பதால் நடைபெற உள்ள தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்குப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து நடைபெற உள்ள தேர்தலில் வாக்குச்சாவடி மையமாக பயன்படுத்த உள்ள சில்வர்புரத்தில் உள்ள தூத்துக்குடி நாசரேத் திருமண்டல அறக்கட்டளை நடுநிலைப்பள்ளியை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் லூசியா சங்க இயக்குனர் கிராசிஸ் மைக்கேல், லூசியா தலைமை ஆசிரியர் பெர்க்மான்ஸ், தேர்தல் களப்பணி அலுவலர் அனிதா மற்றும் மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story