நெல்லையில் போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பயிற்சி கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது


நெல்லையில் போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் பயிற்சி கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 17 March 2019 3:00 AM IST (Updated: 17 March 2019 4:04 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போலீஸ் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி வகுப்பு கலெக்டர் ஷில்பா தலைமையில் நடந்தது.

நெல்லை,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி நடக்கிறது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட போலீஸ் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஷில்பா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் முன்னிலை வகித்தார். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் துணை சூப்பிரண்டுகள், மாநகர உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், கலெக்டர் ஷில்பா பேசுகையில், “காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் நடைமுறை வகுத்துள்ளது. தேர்தல் ஆணையம் சுவிதா என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிகளை சரியான முறையில் புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து ‘சுவிதா’ செயலி மூலம் பொதுக்கூட்டம் மற்றும் பிரசாரங்களுக்கு ஆன்லைன் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த செயலியை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும்?, அதன் மூலம் அரசியல் கட்சியினருக்கு அனுமதி வழங்குவது எப்படி? என்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், அரசியல் கட்சியினர் விதிமுறைகளை மீறினால் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் ஓட்டுகள் போடுவதும் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர்கள் மணீஷ் நாரணவரே (நெல்லை), சவுந்தர்ராஜன் (தென்காசி), மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, தேர்தல் தாசில்தார் புகாரி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story