வேட்பாளர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் மேலிட பார்வையாளர் ஆலோசனை சபாநாயகர் வைத்திலிங்கத்தையும் சந்தித்தார்


வேட்பாளர் தேர்வு தொடர்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் மேலிட பார்வையாளர் ஆலோசனை சபாநாயகர் வைத்திலிங்கத்தையும் சந்தித்தார்
x
தினத்தந்தி 17 March 2019 12:13 AM GMT (Updated: 17 March 2019 12:13 AM GMT)

காங்கிரஸ் கட்சியில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம்? என்பது குறித்து மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுவை எம்.பி. தொகுதிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கு போட்டியிட விரும்புபவர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் 3 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சபாநாயகர் வைத்திலிங்கம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. இந்த 3 பேரில் ஒருவர்தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் வேட்பாளர் தேர்வு குறித்து காங்கிரஸ் மேலிட பார்வையாளரான சஞ்சய்தத் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., அரசு கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏ.க்கள் ஜெயமூர்த்தி, எம்.என்.ஆர்.பாலன், தீப்பாய்ந்தான், விஜயவேணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அவர்களிடம் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம்? என்பது குறித்தும், வெற்றிவாய்ப்பு பற்றியும் சஞ்சய்தத் கேட்டறிந்தார்.

அதன்பின் சபாநாயகர் வைத்திலிங்கத்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர்கள் இருவரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Next Story