வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்


வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்
x
தினத்தந்தி 18 March 2019 4:15 AM IST (Updated: 17 March 2019 8:38 PM IST)
t-max-icont-min-icon

வார விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

பென்னாகரம்,

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியது. நேற்று காவிரி ஆற்றில் வினாடிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்தது.

இந்தநிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி மற்றும் காவிரி கரையோரம் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே பரிசலில் சென்றனர்.

பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார், தீயணைப்பு படையினர் காவிரி கரை, மெயின் அருவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. குறிப்பாக குளிர்பானங்கள், வெள்ளரி, இளநீர் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாங்கி சாப்பிட்டனர். மேலும் மீன் மார்க்கெட்டில் சுற்றுலா பயணிகள் தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சமையல் செய்து குடும்பத்தினர், நண்பர்களுடன் சாப்பிட்டனர்.


Next Story