மீன்சுருட்டி அருகே 2 குடிசைகள் தீயில் எரிந்து நாசம்


மீன்சுருட்டி அருகே 2 குடிசைகள் தீயில் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 17 March 2019 11:00 PM GMT (Updated: 17 March 2019 7:35 PM GMT)

மீன்சுருட்டி அருகே 2 குடிசைகள் தீயில் எரிந்து நாசமாயின.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள தழுதாழை மேடு காலனி தெருவை சேர்ந்தவர்கள் மணிகண்டன்(வயது 37). இவரது உறவினர் தேவேந்திரன்(40). இருவரும் கூலி தொழிலாளர்கள். இருவரின் குடிசைகளும் அருகேயே அமைந்துள்ளது. நேற்று காலை மணிகண்டன் மற்றும் அவரது குடிசையில் உள்ளவர்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று விட்டனர். இதேபோல் தேவேந்திரன் குடிசையில் உள்ளவர்களும் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர். கடந்த சில நாட்களாகவே இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் மணிகண்டனின் குடிசையில் மின்கசிவு ஏற்பட்டு, தீப்பிடித் தது. இதில் மணிகண்டன் மற்றும் தேவேந்திரனின் குடிசைகள் தீப்பிடித்து எரிந்தது.

காலனி தெருவில் உள்ளவர்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்றிருந்ததால் குடிசைகள் தீப்பற்றி எரிந்தது தெரியாமல் போனது. பக்கத்தில் உள்ள வயல்களில் வேலை செய்து கொண்டு இருந்தவர்கள் ஊருக்குள் வெடி சத்தம் போன்று சத்தம் கேட்டதால் காலனி தெருவிற்கு ஓடிவந்து பார்த்தபோது, மணிகண்டன் மற்றும் தேவேந்திரன் குடிசைகள் தீப்பற்றி எரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இதுகுறித்து மீன்சுருட்டி போலீசாருக்கும், ஜெயங்கொண்டம் தீ அணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார், ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையில் 6 பேர் கொண்ட குழு தீயை அணைத்தனர். குடிசையில் இருந்த 3 கியாஸ் சிலிண்டர்களும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மணிகண்டன் குடிசையில் பீரோவில் வைத்து இருந்த ரூ.15 ஆயிரம் மற்றும் 4 பவுன் தங்க நகைகள் எரிந்து நாசமாயின. மேலும் பத்திரம், ரேஷன் கார்டு, சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசமாயின.

இதேபோல் தேவேந்திரன் குடிசையில் பீரோவில் வைத்து இருந்த ரூ.20 ஆயிரம், 6 பவுன் தங்க நகைகள் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் இருவரின் குடிசையும், குடிசையில் வைக்கப்பட்டு இருந்த வீட்டு உபயோக பொருட்களும் முற்றிலும் எரிந்து நாசமாயின.

இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் தாசில்தார் குமரய்யா, கிராம நிர்வாக அதிகாரி தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மணிகண்டனுக்கும், தேவேந்திரனுக்கும் ஆறுதல் கூறினர். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story