தஞ்சை திருமண மண்டபத்தில் மணமகளுக்கு சொந்தமான 60 பவுன் நகை திருட்டு


தஞ்சை திருமண மண்டபத்தில் மணமகளுக்கு சொந்தமான 60 பவுன் நகை திருட்டு
x
தினத்தந்தி 17 March 2019 10:15 PM GMT (Updated: 17 March 2019 9:04 PM GMT)

தஞ்சை திருமண மண்டபத்தில் மணமகளுக்கு சொந்தமான 60 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர், போலீசாரை கண்டதும் நகையை போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை செல்வம்நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக நேற்றுமுன்தினம் இரவே வெளியூரில் இருந்து மணமகள் வீட்டினர் வந்திருந்து திருமண மண்டபத்தில் தங்கி இருந்தனர். மணமகள் தனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் உறவினர்களுடன் தூங்கி கொண்டிருந்தார். திருமணத்தின்போது அணிந்து கொள்வதற்காக கொண்டு வரப்பட்ட 60 பவுன் நகையை ஒரு பையில் வைத்து இருந்தனர்.

அந்த பையை தலையணைக்கு அடியில் வைத்து மணமகள் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் அனைவரும் அயர்ந்து தூங்கிய நேரத்தில் மர்மநபர் திடீரென திருமண மண்டபத்திற்குள் நுழைந்தார். அவர், மணமகள் அறைக்கு சென்று 60 பவுன் நகை வைத்திருந்த பையை தூக்கி கொண்டு அறையை விட்டு வெளியே வந்தார். அப்போது தண்ணீர் குடிப்பதற்காக எழுந்த மணமகளின் உறவினர், பையுடன் மர்மநபர் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அவர் திருடன்.. திருடன்.. என சத்தம்போட்டார். இதை கேட்டு தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து மர்மநபரை விரட்டி சென்றனர். மேலும் தெற்கு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும் விரைந்து வந்து மர்மநபரை விரட்டினர். இதனால் பதற்றம் அடைந்த மர்மநபர், பையை அப்படியே மண்டபத்தின் பின்புறம் போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டான்.

பையை போலீசார் எடுத்து அதனுள் நகை இருக்கிறதா? என பார்த்தபோது உள்ளே 60 பவுன் நகை அப்படியே இருந்தது. போலீசாரும், திருமண வீட்டினரும் தன்னை பிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் நகையை போட்டுவிட்டு சென்று இருக்கலாம் என தெரிகிறது. மேலும் நகையை திருடியது மர்மநபரா? அல்லது தெரிந்த நபரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story