2¼ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட இலக்கு கலெக்டர் தகவல்


2¼ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போட இலக்கு கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 18 March 2019 3:00 AM IST (Updated: 18 March 2019 3:29 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 2¼ லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

விருதுநகர்,

விருதுநகர் மருளுத்து கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது. முகாமை கலெக்டர் சிவஞானம் தொடங்கி வைத்து கூறியதாவது:-

கோமாரி நோயானது கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும் கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகமாகும்.

மேலும் இந்த நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும். நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் போன்ற காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது. மேலும் நோய் பாதித்த கால்நடைகளை பிரித்து பராமரிக்காமல் இருத்தல், பாதிக்கப்பட்ட மாடுகளில் இருந்து தீவனம், தீவனத்தட்டுகள், தண்ணீர், வைக்கோல், கால்நடைகளின் இதர உபகரணங்கள் மற்றும் மனிதர்கள் மூலமும் இந்நோய் பரவும். இந்த நச்சுயிரி மாட்டுக்கொட்டகையில் சுமார் 15 நாட்கள் உயிருடன் இருக்கும்.

இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. மாவட்டத்தில் வருகிற 4-ந்தேதி வரை அனைத்து ஊராட்சிகளிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெறும். அதற்கு பின்னர், 10 நாட்களுக்கு விடுபட்ட கால் நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெறும். மாவட்டத்தில் 2¼ லட்சம் பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் நடைபெறும் முகாம்களில் 65 தடுப்பூசி பணி குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் ஒரு கால்நடை உதவி மருத்துவர், ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு கால்நடை பராமரிப்பு உதவியாளர் என நியமிக்கப்பட்டு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ள உள்ளனர்.

இவ்வாறு கூறினார்.

Next Story