நெல்லை அருகே இளம்பெண்ணை ஏமாற்றி நகை பறித்த 3 பேர் கைது


நெல்லை அருகே இளம்பெண்ணை ஏமாற்றி நகை பறித்த 3 பேர் கைது
x
தினத்தந்தி 18 March 2019 3:30 AM IST (Updated: 18 March 2019 3:30 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை அருகே இளம்பெண்ணை ஏமாற்றி நகை பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவருடைய மனைவி சூடாமணி (வயது 20). சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து சூடாமணி மட்டும் நெல்லைக்கு வருவதற்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு சென்றார்.

அங்கு அருகில் இருந்த பெண் சூடாமணியிடம் நைசாக பேச்சுக்கொடுத்தார். அப்போது சூடாமணி, தனக்கும், கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால், தான் மட்டும் நெல்லைக்கு செல்வதாகவும், தன்னை ஏதாவது ஒரு காப்பகத்தில் சேர்த்து விடுமாறும் கூறி உள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சூடாமணியிடம் இருந்து நகையை பறிக்க அந்த பெண் திட்டமிட்டார். இதையடுத்து நெல்லைக்கு வந்த அவர்களை 2 பேர் வரவேற்று, காப்பகத்துக்கு அழைத்து செல்வதாக கூறினர். இதைத்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களில் அவர்கள் சென்றனர். முன்னீர்பள்ளம் அருகே சென்றபோது சூடாமணியிடம் அவர்கள் நகையை கேட்டு தகராறு செய்தனர். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை பிடித்து முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார், பிடிபட்டவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது பாளையங்கோட்டை அருகே உள்ள கொங்கந்தான்பாறையை சேர்ந்த இசக்கி மனைவி பொன் மெர்சி (24), குலசேகரன்மங்கலத்தை சேர்ந்த வின்சென்ட் (44) மற்றும் விஷ்ணு என்பது தெரியவந்தது. அவர்கள் ஏற்கனவே சூடாமணியிடம் 2 பவுன் நகையை நைசாக பறித்ததும், மேலும் அவரிடம் இருந்த 3 பவுன் நகையை பறிக்க முயற்சி செய்தபோது பொதுமக்களிடம் சிக்கியதும் தெரியவந்தது.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொன் மெர்சி, வின்சென்ட், விஷ்ணு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. 

Next Story