மேல்கோட்டையில் அமைந்துள்ள செலுவநாராயணா சாமி கோவிலில் வைரமுடி உற்சவ விழா


மேல்கோட்டையில் அமைந்துள்ள செலுவநாராயணா சாமி கோவிலில் வைரமுடி உற்சவ விழா
x
தினத்தந்தி 18 March 2019 5:18 AM IST (Updated: 18 March 2019 5:18 AM IST)
t-max-icont-min-icon

மேல்கோட்டையில் அமைந்துள்ள செலுவநாராயணா சாமி கோவிலில் நேற்று வைரமுடி உற்சவ விழா கோலாகலமாக நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மண்டியா,

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா மேல்கோட்டையில் செலுவநாராயணா சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பெருமாள் மூலவராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துவருகிறார். இந்த கோவில் 4 சுயம்பு ஷேத்திரங்களில் ஒன்றாகும். மற்ற 3 சுயம்பு ஷேத்திரங்கள் திருப்பதி, ஸ்ரீரங்கம், காஞ்சீபுரம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் யாதவ கிரி என்றும், தட்சிண பத்ரி என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைரமுடி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மைசூரு மன்னர் குடும்பத்தினரால் பெருமாளுக்கு வைரமுடி காணிக்கையாக வழங்கப்பட்டதால் இது வைரமுடி உற்சவம் என்று அழைக்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

இப்படி பல்வேறு சிறப்புமிக்க வைரமுடி உற்சவ விழா நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. இரவு 8.30 மணியளவில் தொடங்கிய இந்த விழா அதிகாலை 4.30 மணி வரை வெகுவிமரிசையாக நடந்தது. இதில் சிறப்பு என்னவென்றால் செலுவநாராயணா சாமியின் சிலை வைரங்கள் பதித்து அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்படுவதுதான். அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலிப்பார்.

அதேபோல் நேற்று இரவு நடந்த ஊர்வலத்திலும் பெருமாள் வைரங்களால் அலங்கரிக்கப்பட்டு பின்னர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வலம் வந்தார். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசித்தனர். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த வைரமுடி பிரம்மோற்சவ விழாவிற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மேலும் அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

முன்னதாக மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பில் இருந்த வைரம் பதிக்கப்பட்ட வைரமுடி, ராஜமுடி, சங்கு, சக்கரம், கடம், பத்மா உள்ளிட்ட ஆபரணங்கள் விழாவையொட்டி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story