விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை, தேர்தல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை


விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை, தேர்தல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
x
தினத்தந்தி 18 March 2019 5:27 AM IST (Updated: 18 March 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

தங்கும் விடுதி உரிமையாளர்கள் தேர்தல் விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்குளம்,

நாடாளுமன்ற தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேர்தல் துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள், மதுபானங்கள் வழங்குவதை தடுக்க பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வடக்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தங்கும் விடுதி உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

விடுதிகளில் தங்குவதற்கு வெளியூர் ஆட்கள் வந்தால் உரிய ஆவணங்களை பெற்றுக்கொண்டு தான் அவர்களை தங்க அனுமதிக்க வேண்டும். கட்சிக்கூட்டங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது. தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் அதிக பணம் வைத்திருக்க கூடாது. வாக்காளர்களுக்கு பணப் பரிமாற்றம் ஏதும் செய்யக்கூடாது. இங்கு தங்கி இருப்பவர்கள் பணப் பரிமாற்றம் ஏதாவது செய்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மதுபானம், பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கக்கூடாது.

தேர்தல் விதிமுறைக்கு எதிராக யாரும் செயல்பட்டால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும். விடுதி அறைகளில் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே தங்க வைக்கப்பட வேண்டும். கூடுதல் நபர்களை தங்க வைக்கக்கூடாது. தேர்தல் விதிமுறைகளை முற்றிலும் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தங்கும் விடுதிகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், சண்முகசுந்தரம், நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர்கள் இனியன், கலையரசன், ஜாகீர் உசேன், குமார், முருகன் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story