பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில் ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி புதுச்சேரி கடற்கரை சாலையில் மாதிரி வாக்குச்சாவடி மையம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் புதுவை மாநில தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு கலந்துகொண்டு மாதிரி வாக்குப்பதிவு மையத்தை திறந்துவைத்தார். அப்போது மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் மற்றும் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
இந்த மாதிரி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு எந்திரம் மற்றும் வி.வி.பாட் எந்திரம் குறித்து மக்களுக்கு தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த மாதிரி வாக்குச்சாவடி மையம் அடுத்த மாதம் (ஏப்ரல்) 17-ந் தேதி வரை செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து பொதுமக்களிடம் 100 சதவீத கட்டாய வாக்குப்பதிவை வலியுறுத்தும் விதமாக காணொலி விழிப்புணர்வு பிரசார வாகனத்தை புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
முன்னதாக தலைமை தேர்தல் அதிகாரி கந்தவேலு நிருபர்களிடம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அதிகாரிகள் நடத்திய சோதனையில் இதுவரை பணம் எதுவும் சிக்கவில்லை. ஆனால் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் நடந்த சோதனையில் பிற மாநிலங்களுக்கு கடத்த முயன்ற ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Related Tags :
Next Story