விருத்தாசலம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை


விருத்தாசலம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை
x
தினத்தந்தி 18 March 2019 3:30 AM IST (Updated: 18 March 2019 5:27 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விருத்தாசலம்,

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் கண்டப்பங்குறிச்சி, கொக்கனாங்குப்பம், ஆதண்டார் கொள்ளை, மேல்இருப்பு, முதனை, கொள்ளிருப்பு, குப்பநத்தம், வயலூர், ராமச்சந்திரன் பேட்டை, மங்கலம்பேட்டை, ராஜேந்திர பட்டினம், தொட்டிக்குப்பம், சத்தியவாடி ஆகிய 13 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை குறித்து அவ்வப்போது அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் ராமச்சந்திரன்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியை சப்- கலெக்டர் பிரசாந்த் மற்றும் தாசில்தார் கவியரசு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதேபோல் பல்வேறு வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு, அங்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இதேபோல் விருத்தாசலம் காவல்துறை கண்காணிப்பு குழு சார்பில் பதற்றமான வாக்குச்சாவடி என்று கண்டறியப்பட்ட குப்பநத்தம் கிராமத்தில் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் வீரசேகரன் முன்னிலை வகித்தார்.

அப்போது, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதன் அவசியம் குறித்து பேசிய போலீசார், உங்கள் கிராமத்தில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக விருத்தாசலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பை தந்திட வேண்டும் என்று வலியுறுத்தினர். தொடர்ந்து போலீசார் குப்பநத்தம் வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். 

Next Story